பதிவு செய்த நாள்
24
ஜூன்
2011
11:06
ஆத்தூர்: ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியொட்டி ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், வசிஷ்ட நதிக்கரை ஓரத்தில், பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று தேய்பிறை அஷ்டமியொட்டி, காலை 8 மணி முதல் 11 மணி வரை மழை வேண்டியும், உலக மக்கள் நன்மைக்காகவும், மகா பிரத்தியங்கிரா தேவிக்கு யாக சால வேள்வி பூஜைகள் நடந்தது. மதியம் 1.15 மணியளவில், வெள்ளி கவசம், புஷ்பம், எருக்கம் பூ மாலை அணிந்து சர்வ சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், ஆத்தூர் ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில், சிறப்பு யாகசால பூஜை செய்து, பைரவர் வழிபாடு நடந்தது. அஷ்டமி விழாவில், ஸ்வாமி பாதத்தில் பூஜை செய்த ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரையிலான நாணயங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.