பதிவு செய்த நாள்
21
மார்
2015
12:03
பரமக்குடி: சுயம்புவாக (தானாக) உருவான கோயில்கள் பல இருந்தாலும், பரமக்குடியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள நயினார்கோவில், நாகநாதசுவாமி கோயில் தனிச்சிறப்பு பெற்றது. இங்கு குழந்தை பேறு வேண்டுவோர், தங்களுக்கு குழந்தை பிறந்ததும், நேர்த்திக்கடனாக அந்த குழந்தையையே தானம் கொடுத்து, பின்னர் ஏலம் எடுக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இக்கோயிலைச் சுற்றி 4 திசைகளிலும் லிங்க வடிவில் மூலவர் வீற்றிருக்கும் சிவாலயங்கள் உள்ளன.
கிழக்கே, 8 கி.மீ., தொலைவில் கொளுவூர் ஆதிநாகநாதர் புற்றடி மண்ணுடன் உள்ளார். இங்கு பக்தர்களுக்கு மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இக்கோயில் எதிரே வருடந்தோறும் வற்றாத நல்ல தண்ணீர் குளம் உள்ளது. மேற்கே, 12 கி.மீ., தொலைவில், எமனேஸ்வரம் உள்ளது. எமன் தனது சாபம் நீங்கிட, ஈசனை பூஜித்த ஸ்தலமாக இருப்பதால், இவ்வூருக்கு எமனேஸ்வரம் என பெயர் வந்துள்ளது. சனிக்கிழமை தோறும் எமன் இங்கு வழிபடுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
வடக்கே, 10 கி.மீ., தொலைவில் சாலைக்கிராமத்தில் உள்ள வரகுணதீஸ்வரர் ஆலயம் வரகுணமன்னனால் கட்டப்பட்டதால், இங்குள்ள சுவாமிக்கு இப்பெயர் வந்தது. இங்கு 5 அடி உயரத்தில் சிவலிங்கம் காட்சியளிப்பது சிறப்பாகும்.தெற்கே, சுமார் 8 கி.மீ., தொலைவில், முக்குடிச்சாலையில் உள்ள குணநதீஸ்வரர், வைகை ஆற்றின்கரையில் உள்ளார். இங்கு தைப்பூசத்தன்று, நயினார்கோவில் நாகநாதசுவாமி எழுந்தருளி, தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. காசி, ராமேஸ்வரம் போன்ற திருத்தலத்திற்கு யாத்திரை செல்ல முடியாதவர்கள், நயினார்கோவிலைச் சுற்றியுள்ள பஞ்ச லிங்கத்தை தரிசிக்க செல்லலாம் என்பது ஐதீகம்.