பதிவு செய்த நாள்
23
மார்
2015
01:03
வேளச்சேரி: பழமை வாய்ந்த பிடாரி செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும், ௨௫ம் தேதி நடக்கிறது. வேளச்சேரியில், பழமையான பிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது. சாமுண்டீஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, இந்திராணி, வராகி, பிரம்மி, மகேஸ்வரி, என, சப்த கன்னியர்கள் அங்கு அருள்பாலிக்கின்றனர். அந்த சப்த கன்னிகளின் சிலைகள், கி.பி., 9ம் நுாற்றாண்டை சேர்ந்தவை. கோவிலில் இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பல்லவன் பார்த்திவேந்திர வர்மனின் கி.பி.966ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது. அதில், ஒன்று, சோழ நாட்டின் ஒரு பகுதியான மலை நாட்டில் உள்ள திருவேட்பூரை சேர்ந்த தேவடிகள் என்பவர், சப்தமாதர் கோவிலில் வழிபாடுகள் நடைபெற, நிலம் தானம் அளித்துள்ள தகவல் காணப்படுகிறது. இரண்டாவது கல்வெட்டு, பரகேசரிவர்மனான ஆதித்த கரிகாலனின் நான்காம் ஆட்சி ஆண்டான, கி.பி., 967ஐ சேர்ந்தது. அந்த கல்வெட்டு கோவில் கருவறை சுவரில் உள்ளது. அதில், கோவிலில் விளக்கு ஏற்றவும், வழிபாடு நடைபெறவும், புலியூர் கோட்டத்து வெளிச்சேரியை (வேளச்சேரி) சேர்ந்த சபையோர், நிலதானம் அளித்தது, குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு பழமை வாய்ந்த, அந்த கோவிலில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாலாலயம் செய்யப்பட்டு, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், பழமை மாறாமல் திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. கும்பாபிஷேகம், வரும், ௨௫ம் தேதி நடக்கிறது.