பதிவு செய்த நாள்
23
மார்
2015
01:03
அவிநாசி : பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், வரும் 7ல் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில், வரும் 27ல் தேர் முகூர்த்தம், ஆயக்கால் நடுதலுடன் குண்டம் திருவிழா துவங்குகிறது. வரும் 1ல் கிராம சாந்தி, கொடியேற்ற பூஜை; 5ல் வசந்தம், பொங்கல் திருவிழா; 6ம் தேதி மதியம் குண்டம் திறந்து பூப்போடுதல் நடக்கிறது.வரும் 7, அதிகாலை 4:00 மணி முதல் பக்தர்கள் குண்டம் இறங்குதல்; அதே நாளன்று மாலை 3:30க்கு தேரோட்டம் நடக்கிறது. 11ல், மகா தரிசனத்துடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவில், 5ம் தேதி இரவு நாதஸ்வர இன்னிசை, நடன நிகழ்ச்சி; 6ம் தேதி இரவு, இன்னிசை பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் சரவணபவன், தக்கார் அழகேசன், பாதுகாப்பு ஏற்பாடுகளை பெருமாநல்லூர் போலீசார் செய்து வருகின்றனர்.