பதிவு செய்த நாள்
23
மார்
2015
01:03
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ராஜகோபுரம் கட்டும் பணி, 2009ம் ஆண்டு துவங்கியும், இதுவரை முடிவடையாமல் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மீண்டும் 2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்க, கருத்துரு தயாரித்து, நிர்வாக அனுமதிக்காக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும், திருத்தணி முருகன் கோவிலுக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினசரி, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடிக்கிருத்திகை, திருப்படித் திருவிழா, மாதந்தோறும் நடக்கும் கிருத்திகை விழாக்களுக்கு கூடுதல் பக்தர்கள் வருகின்றனர்.
ராஜகோபுரம்...: இக்கோவிலுக்கு, ராஜகோபுரம் இல்லாதது, பக்தர்கள் இடையே பெரும் குறையாக இருந்து வந்த நிலையில், கடந்த, 2009 நவ., 18ம் தேதி, இந்து அறநிலைய துறை மூலம், 4.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 123 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி துவங்கியது. 2011 ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டாலும், பல்வேறு நிர்வாக சிக்கல்களால், கோபுரத்தின் அடித்தளம் மட்டும், 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 38 அடி உயரத்திற்கு அமைக்கும் பணி, 2011ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் தான் முடிவடைந்தது. தொடர்ந்து, 2013 ஜனவரி மாதம், 40 லட்சம் ரூபாய் செலவில், 30 அடி உயரம் கல்காரம் அமைக்கும் பணிகள் துவங்கியது. டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், கல்கார பணிகளை, 30 சதவீதம் கூட முடிக்காத நிலையில், கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்ததாக கூறி, டெண்டர் தொகையை உயர்த்தி தர வேண்டும் என, பணிகளை பாதியில் நிறுத்தி விட்டார்.
ஒப்பந்ததாரரை கோவில் நிர்வாகம் இருமுறை அழைத்து பேசியும் பணிகள் செய்யாததால், டெண்டரை, 2013 நவம்பர் மாதம், ரத்து செய்தது. மறு டெண்டர்:அதன் பின், கல்காரப் பணிகளை முடிக்க, 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறு டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கி, ஆகஸ்ட் இறுதியில் பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து, கல்காரத்தில் 123 அடி உயரத்திற்கு, 9 நிலை ராஜகோபுரம் கட்ட, 2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருத்துரு தயாரித்து, இந்து சமய அறநிலைய துறை ஆணையருக்கு கடந்த ஜனவரி மாதம் அனுப்பப்பட்டது. இதுகுறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ராஜகோபுரம் கட்டும் பணியில், தற்போது கல்காரம் அமைக்கும் பணி வரை முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் மேற்கொள்ள பணிகளுக்கு, கருத்துரு தயார் செய்து, இந்து சமய அறநிலைய துறை ஆணையருக்கு பரிந்துரை செய்தோம். தற்போது, அரசு நிர்வாக அனுமதி கொடுத்துள்ளது. தொழில்நுட்ப அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. அடுத்த மாதத்திற்குள் அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்துடன், மீண்டும் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துரித வேகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.