பதிவு செய்த நாள்
25
ஜூன்
2011
11:06
பண்டரிபுரத்து மகான்கள் என்றால் அவர்கள் பண்டரிபுரத்தில் பிறந்து
வளர்ந்து அந்த பாண்டு ரங்கனை போற்றி ஆசி பெற்றவராக கொள்ளக் கூடாது. எங்கே
அவதரித்தாலும் பண்டரீபுர மண்ணை மிதித்து, அந்த பாண்டு ரங்கனைப் போற்றி
புகழ் பாடி பெருமைகளைச் சேற்றவர்கள் ஏராளமானோர். அவ்வகையில் ஓர் உயர்ந்த
மகான் ஸ்ரீஜயதேவர். கி.பி. 12 ம் நூற்றாண்டில் பூரி க்ஷேத்திரத்தின்
அருகில் பில்வகாம் என்கிற ஊரில் வசித்து வந்த நாராயண சாஸ்திரியார் -
கமலாம்பாள் என்கிற திவ்ய தம்பதிகளுக்கு ஜயதேவர் திருக்குமாரராக
அவதரித்தார். (இவர்களுக்கு நெடுநாட்களாக புத்திர பாக்யம் இல்லை. இவர்கள்
திருமாலை இடைவிடாது வழிபட, திருமால் அருள்கூர்ந்து, இறை அம்சமும், வேத
வியாசரின் வடிவாகவும் ஜயதேவர் அவதரித்தார் என்று நூல்கள் கூறுகின்றன.
தக்க
வயதில் ஜயதேவருக்கு உபநயனம் செய்து வைத்தனர். சாஸ்திரங்கள், மற்றும்
புராணங்களைத் தன் குமாரனுக்கு பயிற்றுவித்தார் நாராயண சாஸ்திரிகள். ஜயதேவர்
என்றதும் அவர் இயற்றிய கீத கோவிந்தம் என்னும் அஷ்டபதி பாடல்கள்தான் நம்
கண் முன் தோன்றும். எப்படி ஆண்டாள் என்றால் திருப்பாவை முதலில் நினைவுக்கு
வருகிறதோ, அவ்வாறே ஜயதேவரின் கீத கோவிந்தம் முதலில் நம் கண் முன்
தோன்றும். இது மிகவும் பழமை வாய்ந்த காவியம் ஆகும். சிருங்கார ரஸம்
ததும்பும் இந்த கீத கோவிந்தம் ஸ்ரீராதை - கிருஷ்ணன் இவர்கள், இவருடைய
காதல் லீலைகளை உணர்ச்சி பூர்வமாகவும் தத்வார்த்தமாகவும் வர்ணிக்கும்
காவியம் கோவிந்தனைப் பற்றிய கீதம் ஆகையால் கீத கோவிந்தம் எனப்படுகிறது.
இந்த அஷ்டபதி பாடல்கள் பாரத தேசம் முழுமையிலும் உள்ள எண்ணற்ற பஜனை
சம்பிரதாயத்தினரால் தொன்று தொட்டுப் பின்பற்றப்படுகிறது என்றால் அதனின்
மஹிமையை எவ்வாறு கூறுவது இதுவும் அந்த கண்ணனின் லீலையே யாகும் எனலாம்.
சர்
எட்வின் ஆர் ரைல்டு என்கிற ஆங்கில கவிஞரான, கீத கோவிந்தத்தை ஆங்கிலத்தில்
மொழி பெயர்க்கப்பட்டது. இது அல்லாது ஐரோப்பிய மொழிகளில் பலவற்றிலும் மொழி
பெயர்க்கப்பட்ட பெருமை இந்த கீத கோவிந்தத்துக்கு உண்டு எனலாம். இந்த கீத
கோவிந்தத்தில் உள்ள சிருங்கார ரசம் வேறு காவியங்களில் பார்க்க இயலாது.
அவ்வளவு சிறப்பும், புகழும் வாய்ந்தது. இதைப் பாடும் போது, நமது மனதில் ஓர்
இன்ப உணர்ச்சி எழும். ஜெயதேவருக்கு பத்மாவதி என்கிற பெண்ணை
மணமுடித்தார்கள். இருவரும் நகமும், சதையாகவும் கூடி களித்தார்கள். ஆயின்
அன்னதானம் செய்வதை முதற்கண்ணாக கொண்டு வாழ்ந்தார்கள். இவ்வாறு இருக்க,
நாராயண சாஸ்திரியும், கமலா பாயும் தவஞ்செய்ய கானகம் சென்றார்கள். ஜயதேவர்
மிகவும் ஜீவகாருண்யம் கொண்டவர். அதிதிகளுக்கு தான தருமம் செய்து வந்தார்.
ஜயதேவருக்கு கண்ணனுடைய லீலா விநோதங்களைப் பாடலாகப் பாட, அதற்கு பத்மாவதி
அபிநயம் செய்து ஆடுவாள்.
அனைத்து மக்களிடம் பக்தி உணர்வைப் பரப்ப,
அஷ்டபதி பாடல்களைப் பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று பாடினார். உடன்
பத்மாவதியும் சேர்ந்து அவருக்கும் அவரது பாடல்களுக்கும் மெருகேற்றினாள்.
அவ்வூர் மக்கள் ஜெயதேவரின் பக்தி இலக்கிய படைப்புக்களையும், துதி
பாடல்களையும், அஷ்டகங்களையும், புத்தகமாக்கி அதை மிகவும் பக்தியோடு
பாராயணம் செய்து வந்தனர். இந்த புத்தகங்களை ஜகன்னாதர் சன்னிதியில் வைத்து
அனுதினம் ஜயதேவரின் பாடல்களை பரவசமாக பாடி வந்தனர். ஒருநாள் ஜகன்னாதரின்
மூல ஸ்தானத்தில் இருந்து உனது பாடலை (ஜயதேவரின்) அங்கீகரித்து ஏற்றுக்
கொண்டேன். ஆனந்தம் அடைந்தேன் என்று அசரீரியாக சப்தம் வந்தது. அங்கு கூடி
இருந்த மக்கள் மிகவும் ஆனந்தம் அடைந்து, ஜெயதேவரின் பக்தி பாடல்களையும்,
இலக்கிய பாடல்களையும் வேதமாக கருதினர். அவரது அஷ்டபதியைப் பாடிப் பாடி
ஆடலாயினர்.
ஜயதேவர் காலத்தில் அப்பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னன்
கவி பாடும் திறன் கொண்டவன். அவனும் ஜகன்னாதர் மேல் பல கவிகள் பாடி
இருந்தான். ஜயதேவரின் பாடல்கள் மட்டும் வேதமாக கருதி மக்கள் பாடி வருவதைக்
கண்டு வெகுண்டான். உடன் எனது அரசாணையில் தனது பாடல்களையும் மக்கள் பாட
வேண்டும் என்று ஆணையிட்டான். ஆயின் மக்கள் ஜயதேவரின் பாடல்களைத் தவிர வேறு
பாடல்கள் பாட இயலாது என சொன்னார்கள். அது கேட்டு கோபமுற்ற அரசன்
மக்களையும், பண்டிதர்களையும், மிகவும் துன்புறுத்தி, கண்டிப்பாக தனது
பாடல்கள் ஒலிக்க வலியுறுத்தினான். இதைக் கேட்ட பண்டிதர்கள் நீங்கள் இயற்றிய
பாடல்களை பகவான் ஏற்றுக் கொண்டால் நாங்களும் பாடுகிறோம் என்றனர்.
உடன்
ஐயதேவரின் பாடல்களையும், அரசர் பாடிய பாடல்களையும் கருவறையில் ஜகந்நாதரின்
திருவடிகளில் வைத்து இரவு கோயில் கதவை மூடினர். மறுநாள் காலை கோயில்
கதவைத் திறந்தால், மன்னனின் பாடல்கள் கோயிலில் ஆங்காங்கு தாறுமாறாக
வீசப்பட்டிருந்தன. ஜயதேவரின் பாடல்கள் ஜகன்னாதரின் திருவடியில் இருந்தது.
அப்பாடல்களை ஜகந்நாதர் பிரித்து படித்து, யாம் இதை ஏற்றுக் கொண்டோம். என்ற
குறிப்பு திருமாலால் எழுதப்பட்டு இருந்தது. என்னே... ஆச்சரியம்! இவ்வளவு
அன்புக்கு ஏற்பு உடையவர் ஐயதேவரே... என வாழ்த்துவது போல் பகவான் அருளினார்.
என்னே அவர் செய்த பாக்யம்! அதாவது ஐயதேவர் ஆழ்ந்த பக்தியுடன் எழுதிய
பாடல்களை பகவான் ஏற்றார் எனலாம். கலி காலத்தில் பக்தியுடன் நாம
சங்கீர்த்தனம் ஒன்றுதான். நாம் இந்த சம்ஸார சாகரத்தில் இருந்து விடுபட
முடியும். என்பதை ஜயதேவர் போன்ற மகான்கள் உணர்த்தி உள்ளார்கள்.
தன்
பிழையை உணர்ந்த மன்னன் வருந்தி இறைவனிடம் மன்னித்து அருள வேண்டினான்.
திருமாலும் அவனின் இந்த நல்ல நோக்கத்தைக் கண்டு அவன் எழுதிய பதிமூன்று
பாடல்களை ஏற்றுக் கொண்டார். அதாவது மனமுருகி வேண்டினால் இறைவன் அருளுவான்
என்பதாகும். ஜயதேவர் பத்மாவதி திவ்ய தம்பதிகள் இறைவனோடு ஏக காலத்தில்
இரண்டறக் கலந்து விட்டனர். இவ்வாறு கிடைப்பது அதிசயத்திலும் அதிசயம். இந்த
பாக்யம் அடைய இந்த தம்பதிகள் போல் வாழ்ந்து பகவானின் அருள் பெற வேண்டும்.
இந்த ஜெயதேவர் சரித்திரத்தையும் அஷ்டபதிகளையும், பக்தியுடன் அனுதினம்
பாராயணம் செய்பவர்களும், கேட்பவர்களும், திருமாலின் அருளைப் பெற்று
ஆனந்தமாக வாழ்வர் என்பது திண்ணம்.
மார்கழி மாதம் பிறந்ததுமே, அனைத்து கோயில்களும் அதிகாலையிலேயே திறக்கப்பட்டு வழிபாடுகள் நடக்கும். ஆன்மிக நாட்டமுடைய பக்தர்களும் விடியற்காலையிலேயே நீராடி திருபள்ளியெழுச்சி, திருப்பாவை, திருவெம்பாவை என பாடி நெகிழ்வார்கள். வீட்டிலோ கோயிலிலோ ஆரம்பித்து பஜனை செய்தவண்ணம் வீதிகளில் வலம்வருவார்கள். அந்த பகவந்நாம ஒலிகேட்டு ஆன்மிகர்கள் அனைவரும் துயிலெழுந்து துதிக்க ஆரம்பித்தார்கள். பஜனை செய்யும் பாகவதர்கள் கீத கோவிந்தம்-ஜயதேவ அஷ்டபதி பாடி, ராதா கல்யாண பஜன உற்சவமும் பேட்டை பேட்டையாகச் செய்வார்கள். அந்த அஷ்டபதியானது 12-ம் நுõற்றாண்டில் வாழ்ந்த வங்கக்கவி ஜயதேவர் இயற்ற, பூரி ஜெகந்நாதர் உகந்துபெற்ற பாடலாக அமைந்தது.
கிழக்கே பூரி(ஜெகந்நாதர்), மேற்கே துவாரகை (துவாரகாநாதர்), வடக்கே பத்ரி (பத்ரி நாதர்), தெற்கே ராமேஸ்வரம் (ராமநாதர்) ஆகியவற்றை முக்கிய திவ்ய தேசங்களென்பர். இவற்றில் பூரியிலுள்ள ஜெகந்நாதர் உருவம் புதுமையானது. வேறெங்கும் காணவியலாதது மரத்தால் செய்யப்பட்ட அருவுருவமானவடிவம் அவரை அன்ன பிரம்மம் என்பர். அன்னபிரசாதம் இங்கு முக்கியம். அதனால் தான் பரப்பிரம்மம் ஜெகந்நாதம் என்கிறார்கள். ஜெகந்நாதரின் முந்தைய பெயர் நீலமாதவன் கிழக்கு கடற்கரையில் அவர் இருந்த பகுதியை நீலகிரி, நீலாச்சலம் என்பர். ஆனால் மலை தென்படாது. (திருச்செந்தூரையும் கந்தமாதன மலை என்பர்.) மாளவ தேச மன்னன் இந்திரத்யும்னன் சிறந்த பக்தன் அவன் மகாவிஷ்ணுவை தரிசிக்க ஆவல் கொண்டான். அப்போது பகவான் அவன் கனவில் தோன்றி, பூரி நீலாச்சல மலையில் என்னைதரிசிக்கலாம் என்று கூறினார். ஆனால் அந்த தெய்வ வடிவம் விஸ்வாஸு என்னும் மலைவாழ் குறவர்குல மன்னனின் ஆதிக்கத்துக்குட்பட்ட பகுதியில் இருந்தது. மற்றவர்களை தரிசிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை.
அந்த தெய்வ மூர்த்தத்தை தரிசிக்கும் ஆவல் மன்னனிடம் மிகுந்திருப்பதைக் கண்ட ராஜகுருவின் தம்பியான வித்யாபதி, மிகுந்த சிரமத்திற்கிடையே நீலமாதவன் இருக்கும் பகுதியை அறிந்தான். அங்கு செல்லவேண்டுமென்ற காரணத்துக்காக. அவன் அந்தணன் என்றபோதும் மலைவாழ் இளவரசியை மணந்தான். மனைவியிடம் நீலாமாதவனை தரிசிக்கவேண்டுமென்று சொல்ல, அவள் தந்தையிடம் கூறினாள். அவர் மாப்பிள்ளையின் கண்களைக் கட்டி அழைத்துச்சென்றார். வித்யாபதி கையில் கடுகை வைத்துக்கொண்டு வழிநெடுக போட்டவாறே சென்றார். நான்கு நாட்கள் பயணம் தொடர்ந்தது. கடைசியாக ஒரு குகையை அடைந்ததும். மாமனார் வித்யாபதியின் கண்கட்டை அவிழ்க்க. நீலமாதவன் விக்ரகத்தை தரிசித்து பேரானந்தம் கொண்டான் வித்யாபதி.
பின்னர் நாடு திரும்பிய வித்யாபதி மன்னனிடம் விவரத்தைச் சொல்லி, கடுகுச் செடிகளை அடையாளம் வைத்துச்செல்வோம் என்று கூற. இருவரும் பயணமானார்கள். இறுதியாக அவர்கள் குகைக்கோயிலை அடைந்த போது. அங்கு நீலமாதவன் விக்ரகம் இல்லை. அரசனும் வித்யாபதியும் மனம் கலங்கி நின்றனர். அன்றிரவு அரசன் கனவில் தோன்றிய பகவான், விடிந்ததும் கடற்கரைக்குச் செல். ஒரு மரக்கட்டை அலையால் உந்தப்பட்டு கரைக்கு வரும் அதையெடுத்து என் உருவத்தை வடித்து வழிபடு. சிலை வடிப்பவரும் அங்கு வந்து சேருவார் என்றருளினார். மகிழ்ந்த மன்னன் காலையெழுந்ததும் கடற்கறை சென்றான். கனவில் கண்டபடியே மரக்கட்டை ஒதுங்கியது. அப்போது திடீரென அங்கொருவர் வந்தார். அவர் மன்னனிடம் நான் ஒரு தச்சன். (தேவதச்சனான விஸ்வகர்மா என்பர்.) நீ விரும்பிய வண்ணம் சிலைவடித்துத் தருவேன். அதற்கு 21 நாட்களாகும். அதை ரகசியமாகத்தான் செய்வேன். இடையில் அதை யாரும் பார்க்ககூடாது என்று நிபந்தனை விதித்தார். மன்னன் சம்மதித்தான். இந்த விவரம் அரசிக்கு மட்டும் தெரியும்.
சிலை செய்யும் பணி யாருமறியாவண்ணம் அரண்மனையில் தொடங்கியது. 15 நாட்கள் கடந்தன. இந்த நிலையில் அரசிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. மரம் வெட்டும் சத்தமோ சிலை செதுக்கும் ஓசையோ எதுவும் கேட்கவில்லையே. ஒருவேளை தச்சர் அன்ன ஆகாரமில்லாமல் இறந்துவிட்டாரோ என்றெண்ணி, மன்னனிடம் தன் ஐயத்தைக் கூறினாள். அரசனுக்கும் அந்த சந்தேகம் தோன்ற, கதவைத் திறந்து பார்த்தான். அங்கு தச்சனைக் காணவில்லை. விக்ரகமும் முழுமை பெறாமல் அருவுருவமாக - இன்று நாம் பூரி ஜெகந்நாதத்தில் காண்கிறோம். அவ்வண்ணமே இருந்தது. மன்னன் துக்கித்தான். அப்போது ஒரு அசரீரி வாக்கு. மன்னனே, கவலை வேண்டாம்.... இதையே ஜெகந்நாதராக குண்டிசா கராவில் பிரதிஷ்டை செய்; என்று கூறியது அதன்படியே பிரதிஷ்டை செய்யப்பட்டது அந்த அரச வம்சத்தினரே இப்போதும் வழிபாடு செய்கிறார்கள். தற்போதுள்ள கோயில் சோடகங்கர் என்ற மன்னனால் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. குறிபிட்ட காலத்திற்கொரு முறை, கோயிலுள்ள ஜகந்நாதர் (கண்ணன்), பலராமர், சுபத்ரா ஆகியோரின் விக்ரகங்கள் புதிதாக செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை மூன்று விக்ரகங்களும் தேரில் ஏற்றப்பட்டு, ஆதியில் இருந்த இடமான குண்டிசா கராவுக்குச் சென்று ஒரு வாரம் தங்க வைக்கின்றனர். பூரி ஆலயத் தேரோட்டம் உலகப்பிரசித்திபெற்றது. லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள்.
பூரியில் ஆதிசங்கரர் கோவர்த்தன பீடம் ஸ்தாபித்தார் ராமானுஜர், மாத்வாச்சார்யார், நிம்பார்சகர், வல்லபாச்சார்யார், கபீர்தாசர், ராமதாசர், ராமானந்தர், மீராபாய், குருநானக் கிருஷ்ண சைதன்யர் முதலிய சாது மகாபுருஷர்கள் விஜயம் செய்துள்ளனர். சைதன்யர் ஜகந்நாதரில் ஐக்கியமானவர். இவ்வாலயத்தில் தினமும் ஜயதேவரின் கீதகோவிந்தம் பாடப்படுகிறது. மணிப்புரி, ஒடிஸி நாட்டியங்களிலும் கீதகோவிந்தம் பிரசித்தம். பரதநாட்டியம், குச்சுப்புடி, கேரள நாட்டியத்திலும் உண்டு. குருவாயூரப்பன் சன்னிதியிலும் தினமும் கீதகோவிந்தம் பாடப்படுகிறது. கீதகோவிந்தம் - அஷ்டபதியானது, கண்ணன் பிறந்த திதிக்கேற்ப எட்டு சரணங்கள் கொண்டது. காயத்ரி மந்திர அட்சரங்களுக்கு ஒப்ப 24 பாடல்கள் கொண்டது. ஸ்ரீமத் பாகவதத்திற்கேற்ப 12 சர்க்கங்கள் கொண்டது. இதில் கண்ணன், ராதை சகி என்று மூன்று பாத்திரங்கள். கண்ணன் மேல் கொண்ட காதலில் ராதையும், ராதைமேல் கொண்ட காதலில் கண்ணனும் தனித்தனியே உருகின்றனர். அவர்கள் இருவரிடமும் மாறிமாறிச் சென்று பேசும் சகி இருவரையும் ஒன்றுசேர்க்கிறாள்.
இதில் கண்ணன் பரமாத்மா; ராதை ஜீவாத்மா சகி எனப்படுவள் குரு. ஜீவாத்மாவானது பரமாத்மாவையடைந்திட - அத்வைத லய ஆனந்தம் பெற குரு எவ்வாறு உதவுகிறார் என்பதே தத்துவம். கீதகோவிந்தத்தின் வடமொழிப்பதங்களை மேலோட்டமாகப் பார்த்தால் விரசமாகத் தோன்றும். தத்துவம் புரிந்தால் அமிர்தமாக இருக்கும். மாதுர்ய பக்தி என்பது ரசம்; விரசமல்ல. காளிதாசர், க்ஷேத்ரக்ஞர், கவிவித்யாபதி, ஆண்டாள், சைதன்யபிரபு, சண்டிதாசர் போன்றோர் மாதுர்ய பக்தி வழியைப் பின்பற்றினர். அர்ஜுனன், குசேலரின் கண்ணன் ஈடுபாடு சக்ய (தோழமை) பக்தி; யசோதையின் கண்ணன் ஈடுபாடு வாத்சல்ய பக்தி; அனுமன், வீபிஷணனின் ராமர் ஈடுபாடுதாச (அடிமை) பக்தி; ஆண்டாள், மீரா கோபிகைகள் போன்றோரின் ஈடுபாடு மாதுர்ய பக்தி.
இப்போது கவி ஜயதேவரின் சரித்திரத்துக்கு வருவோம். ஸ்ரீமத் பாகவதத்தில் ராதையைப் பற்றி கூறாததால், அதைக் கூறும் பொருட்டு வியாசரே ஜயதேவராக உதித்தாரென்றும்; கோபியாரின் கிருஷ்ணப் பிரேம பக்தியை உணர்த்த உத்தவரே ஜயதேவராக அவதரித்தார்ரென்றும்; கண்ணன் - ராதையின் புகழ் பாட, கண்ணன் ஊதிய புல்லாங்குழலே ஜயதேவராக அவதரித்ததென்றும் கூறுவர்.
பூரி வட்டத்தில் கேந்தூர் என்ற கிராமம் உள்ளது. அதுவே ஜயதேவர் பிறந்த இடமென்பர். மிதிலாபுரியில் பிறந்தாகவும் சொல்வர். மேற்கு வங்காளத்திலுள்ள பார்ட்வான் வட்டத்தில் கேந்தூளி என்னும் கிராமம் உள்ளது. அங்கு ஜயதேவர் வழிபட்டதாகச் சொல்லப்படும் ஒரு சிறிய ராதாகிருஷ்ணர் கோயில் உள்ளது. அதனருகே ஜயதேவ பீடம் என்ற சிறிய இடமும் உள்ளது. இங்கு வசிக்கும் நாடோடி மக்கள், நாம் பொங்கல் விழா நடத்தும் சமயத்தில் அங்குள்ள நதியில் நீராடிவிட்டு ஜயதேவ மேளா என்னும் விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அப்போது கீதகோவிந்தம் பாடுவார்கள் குக்கிராமத்தில் பெரியவிழா! பொங்கல் தினம் ஜயதேவர் பிறந்த தினமல்ல; அவர் மறைந்த தினமென்பர். 19, 20, 21-ஆம் அஷ்டபதிகளில் பத்மாவதி ரமணா ஜயதேவ என்றுள்ளதால், ஜயதேவரின் மனைவி பெயர் பத்மாவதி எனலாம். ஜயதேவர் பாட, பத்மாவதி ஆடுவாராம் இன்றைய ஓடிஸி நடனம் அதுவே. பிடிகை துதியில் உமாபதிதரன், சரண, தோயி, ஆசார்ய கோவர்தன என்ற பெயர்கள் உள்ளன. இவர்கள் 12-ம் நூற்றாண்டில் வங்கத்தை ஆண்ட மன்னன் லக்ஷ்மண சேனனின் அரசவைக் கவிஞர்கள். எனவே ஜயதேவரின் காலம் 12ம் நூற்றாண்டு எனலாம்.
ஜயதேவர் சிறுவயதிலேயே வேதம், புராணம், இதிகாசம் உபநிடதம், நாட்டியம் சங்கீதம் போன்றவற்றில் தேர்ந்தவரானார். ராதாகிருஷ்ண பக்தர் குடும்ப வாழ்க்கையில் விருப்பமில்லாதிருந்தார். அச்சமயம் பூரியில் வசித்துவந்த தேவசர்மா தம்பதிக்கு, ஜெகந்நாதரின் அருளால் பத்மாவதி என்ற பெண் குழந்தை பிறந்தது. உரிய வயதில் பத்மாவதியை ஜெயதேவருக்கு மணம் முடிக்க ஏற்பாடாயிற்று. முதலில் ஜெயதேவர் மறுத்தாலும், ஜெகந்நாதரின் உத்தரவென்று தேவசர்மா சொன்னதால் சம்மதித்தார் பத்மாவதியும், தங்கள் தெய்வீக ஈடுபாட்டுக்கு இடையூறு செய்யாமலிருப்பேன் என்று உறுதியளிக்க, திருமணம் ஈடேறியது. ஜயதேவர் பாட பத்மாவதி நடனமாடுவாள். அப்படி எழுதப்பட்டதே 24 அஷ்டபதிகள் கொண்ட கீதகோவிந்தம், அதில் 19-ஆவது அஷ்ட பதியை அவர் புனைகிறார். ராதை கண்ணன் மீது அசாத்திய கோபத்திலிருக்கிறாள். கோபம் தவிர்க்கவேண்டுகிறான் கண்ணன். ஏழாவது சரணம் எழுத முனையும்போது, ராதே, கோபம் தவிர். உனது நளின பாதாரவிந்தங்களை என் தலைமீது வை என்ற வரிகள் மனதில் தோன்றுகிறது. இது என்ன அபத்தமாகத் தோன்றுகிறதே என்று அவர் எழுதவில்லை.
எழுந்து, பத்மாவதி நான் நதிக்குச் சென்று நீராடி அனுஷ்டானங்களை முடித்துவிட்டு வருகிறேன் என்று புறப்பட்டுப்போனார். எல்லாம் முடித்து திரும்பிவந்து கதவைத் தட்டினார் பத்மாவதி இடக்கையால் கதவைத் திறந்தாள். வலக்கையில் உணவுண்ட எச்சில் சாதம். இருவரும் திடுக்கிட்டனர். சுதாரித்த ஜயதேவர், பத்மா நான் வீடு வந்து பூஜைசெய்து சாப்பிட்டபின்தானே நீ சாப்பிடுவாய் இன்று என்னாயிற்று? என்று கேட்டார். ஜயதேவர் ஆற்றில் நீராடிவிட்டுத் திரும்ப வந்து வீட்டின் கதவைத்தட்ட இடக்கையால் கதவைத் திறந்த மனைவி பத்மாவதியைக் கண்டு திடுக்கிட்டார். பத்மா, நான் வீடுவந்து பூஜைசெய்து சாப்பிட்டபின்தானே நீ சாப்பிடுவாய்? இன்று என்னாயிற்று என்று கேட்டார். அவளது வலக்கையில் உணவுண்டு கொண்டிருந்த அடையாளம். பத்மாவதியும் திடுக்கிட்டாள். எனக்கும் புரியவில்லையே நீராடி வருவாதகப் புறப்பட்டுப் போனவர் உடனே திரும்பி வந்தீர்கள் ஒரு ஞாபகம் வந்தது. மறந்துவிடப் போகிறதென்று வந்தேன். எழுதிவிட்டுப் போகிறேன் என்று எழுதினீர்கள். பின் இங்கேயே அனுஷ்டானங்களை முடித்துவிடுவதாகச் சொல்லி, அவ்வாறே நீராடி பூஜைசெய்து பின் சாப்பிட்டீர்கள் பூஜையறையில் சென்று படுத்துவிட்டீர்கள். நீங்கள் சாப்பிட்ட இலையில் தான் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்று இழுத்தாள்.
நான் இப்போது தானே வருகிறேன் என்று சொல்லி பூஜையறைக்குச் சென்று பார்த்தார் அங்கே யாருமில்லை சுவடியை எடுத்துப் பார்த்தார். அதில் தனக்குத் தோன்றிய ஆனால் எழுதாத சொற்களே எழுதப்பட்டிருந்தன. நான் அபத்தமென்று எண்ணித் தவிர்த்ததை. அந்தக் கண்ணனே வந்து எழுதிவிட்டானே! என்று மெய்சிலிர்த்தார்.
ஸ்மரகள கண்டனம் மம சிரசி மண்டனம்
தேஹிபத பல்லபம் உதாரம்
ஜ்வலதி மயிதாருணோ மதன கதனானலோ
ஹரது ததுபாஹித் விசாரம்-ப்ரியே சாருசீலே.
என்பது அந்த பாடல் 10-ஆவது அஷ்டபதி.
(ராதையின் பாதங்களைத் தன் தலைமீது வைக்கச் சொல்கிறான் கண்ணன். இதே குறிப்பை அருணகிரிநாதர். பணியா என வள்ளிபதம் பணியும் தணியா அதிமோக தயாபரா, குறமின் பத சேகரனே என்று கந்தரனுபூதியிலும்; மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா என்று திருப்புகழிலும் முருகனைப் பாடுகிறார். ஜயதேவர் பத்மாவதியிடம், என் உருவில் கண்ணனே வந்தான் நீ அவனை தரிசித்தாய், உணவளித்தாய் பாக்கியவதி நீ என்று பாராட்டி. கண்ணன் உண்ட உச்சிஷ்டம் என்று பத்மாவதி உண்ட எச்சில் உணவை அவர் உண்டார் எட்டாவது அடியை பத்மாவதி ரமண ஜயதேவ என்றெழுதி உன்னதம் ஈந்தார். 19-ஆவது அஷ்டபதிக்கு உஜ்ஜீவன அஷ்டபதி சஞ்சீவி அஷ்டபதி (இறந்தவரை உயிர்ப்பிக்கும் அஷ்டபதி) என்று பெயர். அதன் மகிமையை சற்று காண்போம். ஒரு சமயம் அந்நாட்டு அரசியிடம் உரையாடிக் கொண்டிருந்தாள் பத்மாவதி. அப்போது அங்குவந்த சேடிப்பெண். ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்றும். அதன் காரணமாக அவர் மனைவி உடன்கட்டை ஏறப்போகிறாள் என்றும் வருத்தத்துடன் கூறினாள் அதைக்கேட்ட பத்மாவதி. அவள் தூய கற்புடையவளென்றால், கணவர் இறந்த செய்தியைக் கேட்டதுமே அவள் உயிர் போயிருக்க வேண்டுமே என்றாள். இந்தப் பேச்சு ராணியை உறுத்தியது. பத்மாவதியின் கற்பை சோதிக்க திட்டமிட்டாள் அவள்.
ஒரு சமயம் அரசர் வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது ஜயதேவரையும் அழைத்துச் சென்றார் அந்த சமயத்தை தன் சூழ்ச்சிக்கு ராணி பயன்படுத்தினாள். வழக்கம்போல் பத்மாவதி ராணியுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, ராணியின் ஏற்பாட்டின்படி சேடி ஐயோ என்ற அலறலுடன் அங்கு ஒடிவந்தாள். அரசருடன் காட்டுக்குச் சென்றடீ ஜயதேவரை புலி தாக்கி அவர் இறந்துவிட்டார் என்று ரத்தம் தோய்ந்த ஆடைகளைக் காட்டினாள். நாதா! நானும் வந்துவிட்டேன்! என்று அப்படியே சரிந்தாள் பத்மாவதி அவள் உயிர் பிரிந்தது. ராணி கதிகலங்கிப்போனாள் இப்படிப் பட்ட உத்தமியை சோதித்தோமே என்று துக்கித்தாள். மாலையானதும் அரசருடன் ஜயதேவரும் வர. அவரிடம் மன்னிப்பு கேட்டு பாதம் பணிந்தாள் ராணி ஜயதேவர் மனம் கலங்கவில்லை கண்ணனே ஜயதேவர் வடிவில் வந்து எழுதிய 19-ஆவது அஷ்டபதியைப் பாடி, என் ரூபத்தில் கண்ணனை தரிசித்து அவனுக்கு உணவளித்தவளாயிற்றே என்று சொல்ல, பத்மாவதி தூக்கத்திலிருந்து எழுவதைப் போல எழுந்து ஜயதேவரின் பாதம் பணிந்தாள். இப்போதும் அஷ்டபதி அறிந்த கிருஷ்ண பக்தர்கள். எவராகிலும் மருத்துவமனையில் அபாய கட்டத்திலிருந்தால். அவர் குணமடைய மானசீகமாக இந்த 19-ஆவது அஷ்டபதியைப் பாடுவார்கள் பலன் பெற்றவர்கள் உண்டு. ஆனால் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் தேவை.
அடுத்து 11-ஆவது அஷ்டபதியின் சிறப்பைக் காண்போம். தோழியானவள் ராதையிடம் சென்று, ராதே, நீயோ கண்ணன் விரகத்தால் தவிக்கிறாய். கண்ணனோ யமுனைக்கரையில் உன் பெயரை உச்சரித்துக்கொண்டு உன்னை அணைந்திடத் துடிக்கிறான் என்று சொல்கிறாள். இதுதான் இந்த அஷ்டபதியில் உள்ளது. தவிக்கும் ஜீவாத்மாவை உய்விக்க பரமாத்மாவும் விழைகிறது. கண்ணனின் கருணை அத்தகையது. பூரி ஜெகந்நாதர் கோயில் கருவறையைத் திறந்த பூசாரி பயந்துவிட்டார். காரணம் ஜகந்நாதர் விக்ரகத்திலிருந்த ஆடைகள் ஆங்காங்கே கிழிந்திருந்தன. சில இடங்களில் ரத்தக்கசிவும் காணப்பட்டது. கதிகலங்கிய பூசாரி ஓடிச்சென்று மன்னரிடம் கூறினார். ஜெகந்நாத பக்தரான அவ்வரசன் கோயிலுக்கு வந்து, இதற்கான காரணத்தைக் கூறியருள வேண்டுமென வேண்டிக்கொண்டு அன்றிரவு கோயிலில் படுத்துக்கொண்டான். அப்போது அவன் கனவில் தோன்றிய பகவான் ஒன்றுமில்லை நேற்றிரவு காய்கறி விற்கும் மாதவி என்று சிறுமி 11-ஆவது அஷ்டபதியைப் பாடிக்கொண்டே தோட்டத்தில் கத்தரிக்காய் பறித்துக் கொண்டிருந்தாள். அதில் மயங்கிய நான், அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின் தொடர்ந்து பாடலை ரசித்தேன். அப்போது செடிகளின் முள் பட்டு ஆடைகள் கிழிந்து விட்டன. கொஞ்சம் ரத்தமும் வந்துவிட்டது என்று கூறினார்.
வியப்படைந்த மன்னன் மறுநாள் காலை அந்த சிறுமியை அழைத்துவரச் செய்து கோயிலில் அமர்ந்து பாடுமாறு கூறி. அவள் குடும்பத்துக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்தான். இந்த 11-ஆம் அஷ்டபதியின் சிறப்புக்கு மற்றொரு சம்பவத்தையும் காண்போம். ஒரு உஞ்சவிருத்தி பிராம்மணர் இந்த அஷ்டபதியைப் பாடியபடி சென்று வீடுகளில் அரிசிபெறுவது வழக்கம். அப்படி ஒருநாள் அவர் வரும்போது ஒரு சிறுமி, சுவாமி தாங்கள் வீட்டுக்குள் வரவேண்டும் என்றாள். என்ன காரணம்? என்று அவர் கேட்க, சுவாமி, நீங்கள் பாடும் அஷ்டபதியைக் கேட்டுக்கேட்டு எனக்கும் மனப்பாடமாகிவிட்டது. ஆகவே நீங்கள் எனது குரு. தங்களுக்கு மரியாதை செய்யவிரும்புகிறேன் என்றாள். சிறுமி அழைக்கிறாளே என்று அவரும் சென்றார். அந்த சிறுமி அவர் காலை அலம்பி பூப்போட்டு வணங்கி, பாலும் பழமும் அளித்தால். அவரும் உண்டார். அவள் ஒரு நெசவாளி வீட்டின் ஒரு மூலையில் சிக்கலாகி அறுந்த நூல்கள் குவிக்கப்பட்டிருந்தன. அதைக் கண்ட அவர் ஏனம்மா. குப்பையைச் சேர்த்து வைத்திருக்கிறாயே. தூரப் போட்டு விடலாகாதா? என்று கேட்டார்.
ஐயா, அது குப்பையல்ல; கண்ணனின் கைகளும் பாதங்களும் பட்ட புனிதமான நூல்கள் என்றாள். நீ சொல்வது புரியவில்லையே என அவர் கேட்க, அஷ்டபதியைப் பாடியபடி நான் ராட்டினம் சுற்றுவது வழக்கம். அப்போது திடீரென கண்ணன் தன் பிஞ்சுக் கால்களுடன் வருவான். விளையாட்டாக நூல்களை அறுத்து சிக்கலாக்குவான் அப்படிச் செய்யாதே என்று சொன்னாலும் கேட்கமாட்டான். அவனது புனித கரங்களும் கால்களும் பட்ட நூலை குப்பையென்று எறிய மனமில்லை என்றாள். இவ்வளவு நாட்களாக நான் அஷ்டபதி பாடுகிறேன். எனக்கு கண்ணன் காட்சி தரவில்லையே என்றெண்ணிய அவர் அம்மா, நீ ராட்டினம் சுற்றிக்கொண்டே அஷ்டபதி பாடு. நானும் கண்ணன் தரிசனம் பெறுகிறேன் என்றார். அவளும் அப்படியே செய்து, சிறிது நேரத்தில் கைகொட்டியபடி, இதோ கண்ணன் வந்துவிட்டான் என்றாள். என்னால் பார்க்க முடியவில்லையே என்று அவர் சொல்ல, கண்ணா, என் குருநாதருக்கு தரிசனம் தரக் கூடாதா? என்று வேண்டினாள் அவள். கண்ணனோ, அவர் வயிற்று ஜீவனத்துக்காகப் பாடுகிறார் உள்ளன்பு, பக்தி பாவம் அதிலில்லை. அதனால் என் தரிசனம் இப்போது அவருக்குக் கிட்டாது. உன் தறி நூல்களை ஆடி அறுக்கிறேன். அதை அவர் காணட்டும் என்று சொன்னார். கண்ணன் சொன்னதை பெரியவரிடம் கூறிய சிறுமி, பாடத்தொடங்கினாள். தறியிலிருந்து நூல்கள் அறுபடுவதைக் கண்ட பெரியவர் பிரம்மித்தார் பணிந்து நெகிழ்ந்தார் எத்தகைய அற்புதமான அனுபவம்.
கீதகோவிந்தம் முழுவதுமே உன்னதமானது. இறைவனாலே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு சான்றாக இரு சம்பங்கள் காண்போம். ஜயதேவர் காலத்தில் லட்சுமணசேனன் என்னும் அரசன் இருந்தான். அவனும் ஒரு கலைஞன்; புலவன்; ஜெகந்நாத பக்தன் அவனும் சில கீதங்கள் எழுதியிருந்தான். ஆனால் மக்கள் ஜயதேவரின் கீதகோவிந்தத்தைப் பாடினார்களே தவிர, மன்னனின் பாடல்களைப் பாடவில்லை. மன்னன் காரணம் கேட்டபோது -ஜயதேவரின் பாடல்கள் மனதை லயிக்கச் செய்கின்றன என்றனர். அரசனோ, யாருடைய பாடல் உயர்ந்ததென்று அந்த பூரி ஜெகந்நாதரே தீர்மானிக்கட்டும் என்று சொல்லி, கோயில் சென்று ஜெகந்நாதரின் ஒரு கரத்தில் தனது பாடல்கள் அடங்கிய சுவடிகளையும் மறுகரத்தில் கீதகோவிந்த சுவடிகளையும் வைத்துவிட்டு கதவைப் பூட்டிவிட்டான். மறுநாள் காலையில் கருவறையைத் திறந்து பார்த்தபோது, மன்னனின் சுவடிகள் கீழே கிடந்தன. ஜெயதேவரின் சுவடி கையிலேயே இருந்தது. அதைக்கண்டு மன்னன் வருத்தமுற்றான். அப்போது ஒரு அசரீரி வாக்கு, மன்னா உனது பாடல்களைவிட ஜயதேவரின் கீதகோவிந்தம் மிகுந்த பக்திரசம் வாய்ந்தது. உனது பாடல்களும் சரியானதே எனவே ஜயதேவர் பாடல்கள் சிலவற்றில் உனது பதங்களும் சேரும் என்று ஒலித்தது. அதன்படி தற்போது நாம் பாடும் பாடல்களில் மன்னனின் பதங்களும் கலந்துள்ளன.
மற்றொரு சம்பவம். ஜயதேவரின் கீதகோவிந்தத்தை காசியில் பண்டிதர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ய விரும்பினான் மன்னன். ஜயதேவருக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் மறுக்கவும் முடியவில்லை. காசியில் கங்கைக்கரையில் பெரிய பண்டிதர்கள்-கவிஞர்கள் சபை கூடியது. ஜயதேவர் அவையோருக்கு வணக்கம் சொல்லி அரங்ககேற்றத்தைத் தொடங்கும். சமயம் ஒரு புலவர் மேடையை நோக்கிவந்தார். நான் கோகுலத்திலிருந்து வருகிறேன். ஜயதேவனாம் கவிஞானம். கீத கோவிந்தமாம் அரங்கேற்றமாம்! எல்லாம் அபத்தம்! நான் எழுதியதை அப்படியே எழுதியிருக்கிறான். எனது கிரந்தத்தைப் படிக்கிறேன் கேளுங்கள் என்று சொல்லி படிக்கச் ஆரம்பித்தார். அரசன் ஜயதேவர் பத்மாவதிக்கு திகைப்பும் ஏனெனில் அந்தப் புலவர் பாடியது கீதகோவிந்தமே பாடி முடித்த புலவர் ஜயதேவரின் கையிலிருந்த சுவடியைப் பிடுங்கி கங்கையில் வீசினார். அப்போது கங்கா தேவி தோன்றி. ஜய தேவா, என்மீது அஷ்டபதி பாடு என்றாள் ஜயதேவர் கங்காஷ்டபதி பாடி முடிக்க. கங்காதேவி நதியில் வீசப்பட்ட சுவடிகளை நீட்டி இதோ உனது உன்னதமான கீதகோவிந்தம் என்றாள். கோகுலப் புலவர் மறைந்து கண்ணன் காட்சி தந்தருளினான் கீதகோவிந்தம் ஜயதேவர் மூலமாக கண்ணனாலே எழுதப்பட்டது. என்றும். அதற்கு கங்கை சாட்சி என்றும் நிரூபிப்பதற்காவே இந்த சம்பவத்தை நிகழ்த்தினான் கண்ணன்! எத்தகைய புனிதமானது கீதகோவிந்தம் (ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும், காஷ்ட சந்நியாசியான காஞ்சி மகாபெரியவரும் கீதகோவிந்தத்தை ரசித்துக் கேட்பார்கள்.)
மகாகவி பாரதியுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சங்கு சுப்பிரமணியன் பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆணையால் கீதகோவிந்தத்தை தமிழாக்கினார். அதே ராக தாளத்துடன் பாடமுடியும். கீதகோவிந்தத்திற்கு தமிழுரைகளும் உள்ளன. வெளிநாட்டவர்களும் இதை ரசித்து ஆங்கிலத்தில் உரையெழுதியுள்ளனர். அடியேனும் ஸ்ரீகீதகோவிந்த ரஸாம்ருதம் என்னும் பெயரில் அஷ்டபதி விரிவுரை எழுதியுள்ளேன். ஜீவ பரம ஐக்கிய பக்தி ரசத்தை கீத கோவிந்தத்தில் உணரலாம்.
ஜயதேவனின் கீதகோவிந்தத்தில் கண்ணன் தன் முடியில் ராதையின் திருவடிகளை வைத்து மகிழ்விக்க வேண்டும் என்ற வரிகள் வரும்.
ஸ்மரகரள கண்டனம் மமசிரஸிமண்டனம்
தேஹிபதபல்லவமுதாரம் சாருசீலே
பிரியே சாருசீலே
என்ற இந்த அடிகள் பகவானுக்குப் பெருமைச் சேர்க்குமா என்ற சந்தேகம் ஜயதேவருக்கு எழுந்தது. உடனே காசிக்குச் சென்று, விஸ்வநாதரிடம் தன் சந்தேகத்தைத் தீர்க்குமாறு வேண்டினார். அன்றிரவு காசிவிஸ்வநாதர், ஜயதேவரின் கனவில் தோன்றி, தன் மீது பஞ்சாஷ்டகம் பாட உத்தரவிட்டார். அப்படியே செய்து முடித்தார் ஜயதேவர்.
இந்த நிலையில், பண்டிதர் சபையில் சலசலப்பு உண்டாயிற்று. குடார பண்டிதர் என்ற பெரியவர், மேற்காணும் அடிகளை எடுத்துக்காட்டி, இது நாராயணனை அவமதிப்பதாகும் என்று குற்றம் சாட்டினார். ஜயதேவர் திகைத்துப் போனார்; தயக்கத்தின் காரணமாக தான் வெளியிடாத அந்த வரிகள், எப்படி அந்த பண்டிதருக்குத் தெரியவந்தது என்று வியந்தார்.
பண்டிதர் அத்துடன் விடவில்லை. இந்த நூலை கங்கையில் எறிவோம். இது, பக்தி சிரத்தையுடன் எழுதப்பட்டதாயின், தங்கை ஏற்றுக்கொள்வாள் என்று ஒரு பரீட்சையும் வைத்தார். அதன்படியே செய்தனர். கீதகோவிந்தத்தைக் கங்கையில் எறிந்த மறுகணமே, அதைக் கையில் ஏந்திக் கொண்டு சிறுமி ஒருத்தி வெளியே வந்தாள். அவள் யார்? சாட்சாத் கங்காதேவியேதான்!
என் திருவடி ஈசன் முடியில் எப்போதும் படுவது குற்றமில்லையே? அப்படியானால் ராதையின் திருவடி கண்ணனின் திருமுடியில் படுவது எப்படிக் குற்றமாகும்? என்று கேட்டாள் கங்காதேவி.
அதை கையில் வாங்கிக்கொண்ட பண்டிதர், மீண்டும் அதைக் கங்கையில் எறியும் பாவனையில் கையை உயர்த்தினார். மறுகணம், விண்ணிலிருந்து இறங்கி அதை ஏந்திக்கொண்டான் கண்ணன். அப்போதே கங்கையும், பண்டிதரும் மறைந்தனர். அங்கே காசிவிஸ்வநாதர் காட்சிதந்து அருள்பாலித்தார். ஆம்! ஜயதேவரின் சிருங்கார வர்ணனையை ஈசனே ஏற்று, உலகுக்கு ஒப்புதல் அளித்துவிட்டார்!