கிராமங்களில் கோயில் விழா வெள்ளாடுகள் தேவை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2015 12:03
ஆண்டிபட்டி : கிராமங்களில் பொங்கல் விழாக்கள் துவங்கி வருவதால் ஆண்டிபட்டியில் வெள்ளாடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆண்டிபட்டி தாலுகாவில் பல பகுதிகளில் ஆடுகள் வளர்ப்பு தொழில் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் திங்கள்கிழமை ஆண்டிபட்டி வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வரும். இயற்கையான மேய்ச்சல் நிலங்களில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. பங்குனி, சித்திரை மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் விழாக்கள் கொண்டாடப்படும் விழாவின் கடைசி நாளில் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். இதனால் ஆடுகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளாக ஆண்டிபட்டி பகுதியில் கடும் வறட்சி தொடர்ந்தாலும் விவசாயிகள் ஆடு வளர்ப்பு தொழிலை கைவிடவில்லை. ஆண்டிபட்டியின் பல்வேறு கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் அந்தந்த பகுதிகளின் தேவைக்கே சரியாகி விடும். வெளியூர் வியாபாரிகள் வரும்போது ஆடுகளுக்கான கிராக்கி அதிகரித்து விடும்.
ஆடு வியாபரிகள் கூறியதாவது: கோயில் விழாக்கள் துவங்கிவிட்டால் ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான ஆடுகள் தேவைப்படுகிறது. ஆடு வளர்ப்பவர்களிடம் ஆடுகள் கேட்டு முன்பணம் கொடுக்கவேண்டியதுள்ளது. சந்தைக்கு வரும் ஆடுகளை வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். வெளியூர் வியாபாரிகள் அதிகம் வரும்போது உள்ளூரில் தட்டுப்பாடு ஏற்படுவதும் உண்டு. இயற்கையான சூழலில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கே எப்போதும் கிராக்கி உள்ளது, என்றனர்.