பதிவு செய்த நாள்
27
ஜூன்
2011
10:06
சிவகிரி : வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி (அர்த்தநாரீஸ்வரர்) கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஜூலை 3ம் தேதி நடக்கிறது. புதிய தேர் வெள்ளோட்டமும் நடக்கிறது. சிவபெருமான் அம்மையுடன் இணைந்து ஒருபாதி பெண்ணாகவும், மற்றொரு பாதி ஆணாகவும் அர்த்தநாரீஸ்வரர் வடிவமாக தோன்றி காட்சியளித்த தலங்கள் தென்னிந்தியாவில் இரண்டு மட்டுமே உள்ளது. அவற்றில் ஒன்று திருச்செங்கோட்டிலும், மற்றொன்று வாசுதேவநல்லூரிலும் உள்ளது. திருக்கைலாயத்தில் பார்வதி-பரமேஸ்வரன் இருக்கும் போது பலரும் வந்து தரிசித்து சென்றனர். அப்போது பிரங்கி முனிவர் மட்டும் வண்டு உருவம் எடுத்து பார்வதியை புறக்கணித்துவிட்டு பரமேஸ்வரனை மட்டும் தரிசித்து போனார். இதனால் கோபம் கொண்ட பார்வதி பரமேஸ்வரனிடம் முறையிட்டார். பரமேஸ்வரன் "தேவி பூலோக மக்கள் நீ வேறு, நான் வேறு என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். நீயும், நானும் ஒன்று என்று உணர்த்துவோம். ஆகையால் நீ பூலோகம் சென்று தாருகா வனத்தில் என்னை வேண்டி தவம் செய். அப்போது நான் அங்கு வந்து உன் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்றார்.
பார்வதிதேவியும் பூலோகம் வந்தார். தாருகா வனத்தில் ஓர் இடத்தில் புளியமரத்தின் நிழலின் கீழ் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அபிஷேக ஆராதனை செய்தார். பார்வதியின் தவத்தை கண்டு பரமேஸ்வரன் மகிழ்ந்து சிவலிங்கத்திலிருந்து எழுந்து அம்மையுடன் இணைந்து ஒரு பாதி ஆணாகவும், மற்றொரு பாதி பெண்ணாகவும் அர்த்தநாரீஸ்வரர் வடிவமாக தோன்றி காட்சியளித்தார் என்பது புராணச் செய்தியாகும். இச்சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு துருவாச முனிவரின் சாபத்திற்கு ஆளான இந்திரன் வந்து அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். ரவிவர்ம மன்னனும், அவர் மனைவி சேரன்மகாதேவியும் இவரை பூஜித்ததால் வயிற்றுவலி நீங்கி மகப்பேறு பெற்றதாகவும் வரலாற்று செய்திகள் உள்ளது. இவ்வளவு சிறப்பு பெற்ற இக்கோயிலை பராக்கிரம பாண்டியன் கட்டியுள்ளார். பழமையும், பெருமையும் மிக்க இக்கோயிலில் நான்கு ஆண்டுகளுக்கு முன் தேர் பழுதாகிவிட்டது. அன்று முதல் தேரோட்டம் நின்றது. மேலும் தெப்பம் பழுது பார்க்கப்படாமல் இருந்ததால் தெப்ப தேரோட்டமும் நடைபெறவில்லை. எனவே இக்கோயிலில் உபயதாரர்கள் மூலம் பல்வேறு திருப்பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது. திருப்பணிகளை வாசுதேவநல்லூர் எஸ்.டி.தங்கப்பழம் - பால்த்தாய் அம்மாள் குடும்பத்தினர், இவரது மகன் முருகேசன் - ரம்யாதேவி குடும்பத்தினர், தங்கமுருகன் குடும்பத்தினர், தேவராஜன் - கமலா குடும்பத்தினர், சுப்பையாபுரம் சவுக்கை சீனிவாசதேவர் குடும்பத்தினர், வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை, வாசுதேவநல்லூர் நாடார் உறவின் முறையினர், வாசுதேவநல்லூர் தேவேந்திர வேளாளர் சமுகத்தினர், நெல்லை மகேந்திரன் குடும்பத்தினர், வரதராஜன் குடும்பத்தினர், நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், சமுத்திரவேலு குடும்பத்தினர், திருவாவடுதுறை ஆதீனம், கார்மேக கண்ணன் குடும்பத்தினர், சீனியப்பநாடார், மாரியப்ப முதலியார் உட்பட அனைத்து சமுதாயத்தினர் சார்பில் பல்வேறு திருப்பணிகள் சுமார் ரூ.1 கோடி செலவில் நடைபெற்றது.
திருப்பணிகள் முடிந்து வரும் ஜூலை 3ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 29ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. 30ம் தேதி முதல் கால யாக பூஜை, ஜூலை 1ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜை, ஜூலை 2ம் தேதி நான்காம், ஐந்தாம் கால யாக பூஜை நடக்கிறது. கும்பாபிஷேக நாளான ஜூலை 3ம் தேதி காலை 4 மணிக்கு 6ம் கால யாக பூஜை, 5.45 மணிக்கு கடம் புறப்பாடு, 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பிள்ளையார்பட்டி வேதஆகம கல்லூரி முதல்வர் பிச்சை குருக்கள் சர்வசாதகம் செய்கிறார். இதில் கோயில் அர்ச்சகர் மகேஷ்பட்டர் உட்பட 100க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கலந்து கொள்கின்றனர். வாசுதேவநல்லூர் தொழிலதிபர் தங்கப்பழம், ஈரோடு யுஆர்சி தேவராஜன் குடும்பத்தினர் கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர். காலை 7 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. தங்கப்பழம், தேவராஜன், எம்எல்ஏ துரையப்பா, வக்கீல் கதிர்வேல், ஆறுமுகநாடார் தேர்வடம் பிடித்து இழுக்கின்றனர். கும்பாபிஷேக விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏ.,கள், எம்,பி.,கள் மற்றும் அனைத்து சமுதாய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை தங்கப்பழம், தேவராஜன் குடும்பத்தினர், கோயில் ஆய்வாளர் ராமசாமி, நிர்வாக அலுவலர் முருகேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.