மாமல்லபுரம் கடற்கரை கோவில் தூய்மைப்படுத்தும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2011 11:06
மாமல்லபுரம் : மாமல்லபுரம் கடற்கரை கோவில் மீது படிந்துள்ள அசுத்தங்கள் ரசாயன கலவையால் அகற்றப்படுகிறது. பல்லவர் கால கலைச் சின்னங்களுக்கு மாமல்லபுரம் புகழ்பெற்றது. இங்கு கடற்கரைக்கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுணன் தபசு மற்றும் பல்வேறு குடைவறை மண்டபங்கள் அமைந்துள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை இவற்றை பராமரித்து பாதுகாக்கிறது. இந்நகரம் கடலோரத்தில் அமைந்துள்ளதால் உப்புக் காற்று மற்றும் பல்வேறு மாசுகளால் புராதனச் சின்னங்கள் பாதிக்கிறது. எனவே தொல்பொருள் ஆய்வுத் துறையின் ரசாயனப் பிரிவு, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புராதனச் சின்னங்களை ரசாயனக் கலவை கொண்டு தூய்மைப்படுத்துகிறது. பாறைகளுக்கிடையே சிக்கியுள்ள மண் துகள், உப்புத்துகள் போன்ற மாசுகள் அகற்றப்படுகிறது. இதனால் புராதனச் சின்னங்கள் புதுப்பொலிவு பெறும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடற்கரைக்கோவிலை தூய்மைப்படுத்தினர். சில மாதங்களுக்கு முன்பு வராக மண்டபம், கணேசரதம், கிருஷ்ணமண்டபம் உட்பட குடைவறை மண்டபங்கள் ஆகியவற்றில் வவ்வால் எச்சங்களை மற்றும் மாசுளை அகற்றினர். அதையடுத்து அர்ச்சுணன் தபசு சிற்பத்தில் படிந்திருந்த மாசுகளை அகற்றினர். தற்போது கடற்கரைக் கோவில் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதையொட்டி கோவிலை சுற்றி சாரம் அமைத்து கோவில் மீது காதிதக்கூழுடன் ரசாயனக் கலவை சேர்த்து இக்கலவையை கோவில் மீது பூசியுள்ளனர். இக்கலவை நன்கு உலர்ந்தபின் அகற்றப்படும். அப்போது கோவிலில் படிந்திருந்த உப்புதுகள்கள் கல்துகள்கள் மணல் மற்றும் அசுத்தங்கள் ஆகியவை கலவையுடன் வெளியேறிவிடும்.