பங்குனி உத்திரத்தன்று மகாலட்சுமி பாற்கடலில் இருந்து அவதரித்தாள். அதேநாளில், மகாவிஷ்ணுவின் மார்பில் இடம்பிடித்தாள். சிவபார்வதி திருமணம் கயிலாயத்தில் இந்த நாளில் நிகழ்ந்தது. ராமபிரான் சீதையையும், அவரது சகோதரர்களான லட்சுமணன், பரதன், சத்ருகனன் ஆகியோர் தங்கள் வாழ்க்கைத்துணைவியராக ஊர்மிளா, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரை அடைந்ததும் இந்த நாளில் தான். தெய்வானை இந்திரனுக்கு வளர்ப்பு மகளான நாள் இன்று தான். இதேநாளில் தான் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணமும் நிகழ்ந்தது. பிரம்மா தன் மனைவி சரஸ்வதியை நாக்கில் வைத்துக் கொள்ளும்படியான வரத்தை இந்த நாளில் பெற்றார். மனைவி இந்திராணியைப் பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்தது இதே நாளில் தான். இதன் காரணமாக, இந்த நாளை தம்பதியர் தினம் என்பர். இந்த நாளில் தான், சிவனுக்கும் திருமாலின் அவதாரமான மோகினிக்கும் சாஸ்தா அவதரித்தார்.