பதிவு செய்த நாள்
02
ஏப்
2015
12:04
பழநி: பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு பழநி இடும்பன்குளத்தில் நீராடும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக தீயணைப்பு துறையினர் ரப்பர் டியூப் படகில் ரோந்து வருகின்றனர். பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு ஈரோடு, காங்கேயம், திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தக் காவடி, மயில்காவடி, பால்குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சண்முகநதி, இடும்பன் குளத்தில் நீராடுகின்றனர். விபத்து தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு துறையினர் 24 மணிநேரமும் இடும்பன்குளத்தில் நிலைய அலுவலர் தலைமையில் 16பேர் கொண்ட குழுவாக ரப்பர் டியூப் படகில் ரோந்துவருகின்றனர். ஆழமான பகுதிகளில் பக்தர்கள் குளிக்ககூடாது என எச்சரிக்கை செய்கின்றனர். மேலும் சண்முகநதி, பாதவிநாயகர் கோயில், வின்ச் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் உட்பட 6 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் உள்ளிட்டோர் மேற்பார்வையில் 100 வீரர்கள் கண்காணிப்பு, மீட்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.