பதிவு செய்த நாள்
04
ஏப்
2015
09:04
பழநி: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சரண கோஷத்துடன் பழநி கிரிவீதியில் தேரோட்டம் நடந்தது. திருஆவினன்குடிகோயிலில் மார்ச் 28ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்.,6 வரை நடக்கிறது. விழாவின் ஏழாம் நாளான நேற்று பங்குனி உத்திர தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் சுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குதல் நடந்தது. முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் உலா வந்து, காலை 10.30 மணிக்கு வடக்கு கிரிவீதியில் சுவாமி தேரேற்றம் நடந்தது. சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டு மாலை 4.50 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. நான்கு கிரிவீதிகள் வழியாக தேர்வலம் வரும்போது பக்தர்கள் நவதானியங்களையும், பழங்கள், நாணயங்களை தேரின் மீது வீசி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என சரணகோஷங்கள் எழுப்பினர். மாலை 6.35 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. இன்று இரவு 9 மணிக்குமேல் வையாபுரி குளத்துகரையில் வாணவேடிக்கை நடக்கிறது. 10 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் முத்துகுமாரசுவாமி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
5 மணிநேரம் காத்திருப்பு: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வின்ச் ஸ்டேஷன், பாதவிநாயகர் கோயில், அடிவாரம் கிரிவீதிகள், ரோப்கார் பகுதிகளில், பால்குடங்கள், தீர்த்தகாவடிகள், பறவைக்காவடி ஆட்டம்பாட்டத்துடன் நேர்த்திகடன் செலுத்தினர். சன்னதிவீதி, ஆண்டவன்பூங்காரோடு, குளத்துரோடு பகுதியில் போதிய போலீசார் இல்லாததால் வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநியில் தனியார், கோயில் லாட்ஜ்களில் அறைகள் காலிஇல்லை என அறிவிக்கப்பட்டது. வின்ச், ரோப்கார் பயணத்திற்கு 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர். மலைக்கோயிலில் வெளிப்பிரகாரம் வரை வரிசையில் 5 மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞான தண்டயுதபாணியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.