ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனி உத்திரத்தையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா மார்ச் 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று காலை செப்புத்தேரில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது. பகல் 12 மணிக்கு கோட்டை தலைவாசல் ரேணுகாதேவி கோயிலில் இருந்து திருக்கல்யாண கூரைப்புடவை, வேஷ்டி, திருமாங்கல்யம் ஆண்டாள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. மாலையில் பெருமாளுக்கு பெரியாழ்வார் கன்னிகாதானம் செய்யும் நிகழ்ச்சி வேதபிரான் பட்டர் வீட்டு வாசலில் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ஆண்டாள் மாலையில் சீர்களுடன் நான்கு மாட வீதிகள், ரதவீதிகளில் சுற்றி மணப்பந்தலில் எழுந்தருளினார். இரவு ஏழு மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கல்யாணமும் நடந்தது. தொடர்ந்து விஜயபாஸ்கர பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா செய்தனர்.