சிவகங்கை : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா, மார்ச் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். 7ம் நாளான நேற்று பொங்கல் வைபவம் நடந்தது. சிவகங்கை மட்டுமின்றி பிற மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் தாயமங்கலம் வந்து பொங்கல் வைத்து அம்மனுக்கு நேர்த்தி செலுத்தினர்.
திசை நோக்கி பொங்கல்: அம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்றது தாயமங்கலம் முத்துமாரியம்மன். பங்குனி திருவிழா காலங்களில் தாயமங்கலத்திற்கு நேரடியாக செல்ல முடியாத சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், நேற்று அதிகாலை தங்களது வீடுகளுக்கு முன் பொங்கல் வைத்து, முத்துமாரியம்மன் கோயில் இருக்கும் திசையை நோக்கி படையல் வைத்து வழிபாடு நடத்தினர்.