பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
01:04
சத்தியமங்கலம் : பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை அதிகாலை நடக்கும் குண்டம் விழாவுக்கு தேவையான எரிகரும்புகளை பக்தர்கள் அதிகளவில் வழங்கி வருகின்றனர். பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா கடந்த, 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 24ம் தேதி பண்ணாரி மாரியம்மன், கோவிலில் இருந்து சப்பரம் மூலம் கிராமங்களுக்கு வீதி உலா புறப்பட்டது.சிக்கரசம்பாளையத்தில் துவங்கி புதூர், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம் சென்று அங்கிருந்து பவானி ஆற்றை பரிசல் மூலம் கடந்து வெள்ளியம்பாளையம் புதூருக்கு வந்தது. பின்னர் இக்கரைதத்தப்பள்ளி, அய்யன்சாலை, உத்தண்டியூர், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர், சத்தியமங்கலம், வடவள்ளி, பட்டரமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் வழியே கோவிலை அடைந்தது. பின்னர் கம்பம் நடப்பட்டது.முக்கிய நிகழ்ச்சியான குண்டம் பூ மிதிக்கும் நிகழ்ச்சி ஏழாம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு துவங்குகிறது.இன்று இரவு, 11 மணிக்கு தெப்பக்குளத்துக்கு சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலை தலைமை பூசாரியை தொடர்ந்து பக்தர்கள் குண்டம் பூ மிதிப்பர். பக்தர்கள் ஆர்வமுடன் எரிகரும்புகளை வாங்கி வழங்கி வருகின்றனர்.விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, 15 பேர் கொண்ட பக்தர்கள் குழு, பாதயாத்திரையாக நேற்று மாலை பண்ணாரி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். நான்கு நாட்களுக்கு முன் மைசூரில் கிளம்பிய பக்தர்கள், நேற்று காலை சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமுள்ள திம்பம் மலைப்பாதையில் பயமின்றி வந்தனர். நாளை அதிகாலை குண்டம் இறங்க உள்ளனர்.மைசூர் முதல் கோவில் வரையிலான பாதை, வனங்களுக்கு இடையே அமைந்துள்ளது.வன விலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தது வனத்துறை, போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.