புதுக்கோட்டை: இலுப்பூர் பொன்வாசிநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரினை வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் மிகவும் பிரசித்திபெற்ற சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாத தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தேர் பழுதுடைந்து இருந்ததால், தேர்சக்கரங்களை ஆறு லட்சம் ரூபாயில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, தேர் வெள்ளோட்டம் நடந்தது. முன்னதாக, வாஸ்துடன் கூடிய யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர், மாலை, வாழைக்கன்றுகள், தோரணங்களால் தேர் அலங்கரிக்கப்பட்டு, பூஜை செய்த கும்பம் கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ், சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேரை இழுத்து வந்தனர்.