பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
02:04
திருவாரூர்: திருவாரூர் ஆழித்தேர் புதுப்பிக்கும் பணியை, கலெக்டர் மதிவாணன் ஆய்வு செய்தார். திருவாரூரில், வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் பழுது ஏற்பட்டதால், தேரை புதுப்பிக்க கடந்த தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, 2011ல் ஆட்சி மாற்றத்தால் தேர் புதுப்பிக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. தற்போது, 90 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக, தேர் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து, கடந்த, மார்ச், 29ம் தேதி காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, திருவாரூர் ஆழித்தேர் புதுப்பிக்கும் பணிகளை, கலெக்டர் மதிவாணன் ஆய்வு செய்தார். அதன் பின், அவர் கூறியதாவது: திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவில் ஆழித்தேர் திருப்பணிக்காக, ஒரு கோடியே, 49 லட்சம் ரூபாய், ஸ்தபதி பணிகளுக்காக, 68 லட்சத்து, 84 ஆயிரம் ரூபாய் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே தேரில் இருந்து பிரிக்கப்பட்ட தேர் பொம்மைகள் மற்றும் மரச்சிற்பங்கள் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்பட்டு, தேரில் பொருத்தப்பட்டுள்ளது. தேர் செய்யும் பணிகள், 90 சதவீதத்துக்கும் மேல் முடிவடைந்துள்ளது. அறநிலைத்துறை அமைச்சரின் ஆய்வுக்கு பின், விரைவில் தேர் வெள்ளோட்டம் நடக்கும். இவ்வாறு தெரிவித்தார். அப்போது, டி.ஆர்.ஓ., மோகன்ராஜ், ஆர்.டி.ஓ., முத்துமீனாட்சி, உதவி கமிஷனர் சிவராம்குமார், செயல் அலுவலர் பாரதிராஜன் உட்பட பலர் இருந்தனர்.