பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
02:04
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன், இன்று துவ ங்குகிறது. வரும் 8ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான அமிர்தவல்லி தாயார் சமேத அகத்தீஸ்வரர் கோவில், மத்துார் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து, இன்று காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா துவங்குகிறது. விழாவை ஓட்டி கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை மற்றும் முதல் கால யாகபூஜைகள் நடக்கின்றன. நாளை (7ம் தேதி) காலை 8:00 மணிக்கு, இரண்டாம் கால யாகபூஜையும், அஷ்டபந்தனம், சமர்ப்பணம், மாலை 6:00 மணிக்கு, மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெறுகின்றன. வரும், 8ம் தேதி காலை 7:00 மணிக்கு, நான்காம் கால யாகபூஜை, காலை 9:00 மணிக்கு, கலச ஊர்வலம் மற்றும் காலை 10:00 மணிக்கு, அகத்தீஸ்வரர் கோவில் கோபுரத்தின் மீது கலசநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகமும், காலை 11:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் மத்துார் கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.