கோவை : சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் மண்டப கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காந்திபார்க் அருகே உள்ள சுக்கரவார்ப்பேட்டையில், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் மேற்குப்பகுதியில் புதியதாக மண்டப கட்டுமானப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து நிறைவடைந்தது. நேற்று கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. கோவில் மண்டபத்தில் வேள்விக்குண்டங்கள், யாகசாலைகள் அமைக்கப்பட்டிருந்தது. சிவாச்சாரியார்கள், கடந்த இரண்டு நாட்களாக வேள்விச்சாலையில் யாகபூஜைகளை மேற்கொண்டனர். நேற்று காலை 7.00 மணிக்கு யாகபூஜைகள் நிறைவடைந்து, புண்ணியத்தீர்த்தங்களை சிவாச்சாரியார்கள், கோபுரகலசங்களுக்கு எழுந்தருளுவித்தனர். பேரூராதீனம் இளையபட்டம் மருதாசலஅடிகளார், சிரவையாதீனம் குமரகுருபரசுவாமிகள் தலைமையில், புண்ணிய தீர்த்தங்களை சிவாச்சாரியார்கள் கோபுரகலசத்தின் மீது ஊற்றினர். பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க, கரங்களை கூப்பி வழிபாடு செய்தனர். உற்சவரும், மூலவரும் கும்பாபிஷேக விழாவையொட்டி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில்நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.