பதிவு செய்த நாள்
29
ஜூன்
2011
10:06
மதுரை: ஆயிர வைசிய மஞ்சப்புத்தூர் மகாஜனசபை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில், மதுரையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அய்யர்பங்களா ராமசுவாமி நவநீத கிருஷ்ண சுவாமி தேவஸ்தான மைதானத்தில் நேற்று மாலை 6 மணி முதல் விஸ்வக்சேனர் ஆராதனை, பாலிகை சமர்ப்பணம், அங்குரார்ப்பணம், காப்புக்கட்டுதல், அக்னி பிரதிஷ்டை, வஸ்தர சமர்ப்பணம், மாங்கல்ய பூஜை, மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதல், வாரணம் ஆயிரம் பாடி தேங்காய் உருட்டுதல், கும்ப ஆரத்தி, தீப ஆரத்தி உட்பட பல்வேறு பூஜைகள் திருமலை சிறப்பு பணி அலுவலர் சேஷாத்ரி தலைமையில் நடந்தது. இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் கோவிந்தா நாமத்தை உச்சரித்தனர். திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி யுவராஜ் பேசியதாவது: திருமலையில் தினமும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதை 800 பேர் மட்டும் தான் காண முடிகிறது. காண முடியாத பக்தர்களின் ஊர்களுக்கே சென்று திருக்கல்யாண உற்சவம் நடத்துகிறோம். இதுவரை 90 இடங்களில் நடத்தியுள்ளோம்; மதுரை 91 வது இடம், என்றார். இந்து தர்ம பிரசார பரிஷத் செயலாளர் வெங்கட்ரெட்டி, ஆயிர வைசிய மஞ்சப்புத்தூர் மகாஜனசபை தலைவர் பாஸ்கரன், அமைப்பாளர் சுரேஷ், பொறுப்பாளர்கள் கணேசன், வெங்கடேஷன், கோபாலகிருஷ்ணன், பாலாஜி, ஒருங்கிணைப்பாளர்கள் குமார், பாண்டி, ரங்கராஜன், ராஜா, தங்கமயில் ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் பலராம கோவிந்ததாஸ். எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், தமிழரசன், வருமானவரித்துறை கமிஷனர் கிருஷ்ணசாமி, தென்மண்டல ஐ.ஜி.மஞ்சுநாதா, அஸ்ரா கார்க் எஸ்.பி.,பங்கேற்றனர். நிகழ்ச்சியை தாமல் ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை வெங்கடேஸ்வரர் சிறப்பு தரிசனம் நடந்தது.