பதிவு செய்த நாள்
09
ஏப்
2015
11:04
திருத்தணி: முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும், ஏழாம் ஆண்டு உற்சவ விழாவில், நேற்று, சக்தி கரகம் வீதியுலா நடந்தது.திருத்தணி நகராட்சி, பெரியார் நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், பங்குனி மாத, ஏழாம் ஆண்டு விழா, கடந்த 1ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் சந்தனக் காப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன. நேற்று காலை 9:00 மணிக்கு, சக்தி கரகம் சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா நடந்தது. தொடர்ந்து, பிற்பகல், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு 10:00 மணிக்கு நாடகம் நடந்தது. இன்று (9ம் தேதி) காலை, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும்; நாளை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உற்சவர் அம்மன் வீதியுலாவுடன், ஏழாம் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது.