பதிவு செய்த நாள்
10
ஏப்
2015
11:04
மீஞ்சூர்: நிதி பற்றாக்குறையால், மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில், புதிய தேரின் திருப்பணிகள், கிடப்பில் போடப்பட்டுள்ளன. திருப்பணிகளை பூர்த்தி செய்ய, கொடையாளர்களிடம் இருந்து, நிதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர், பெருந்தேவி தாய õர் சமேத வரதராஜ பெருமாள் கோவில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின்போது, இங்கும் அதே நாட்களில் விழா நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும், பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாள் தேர் திருவிழா, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
36 அடி உயரம்: தேர் திருவிழாவின்போது, பயன்படுத்தப்பட்டு வரும், தற்போது உள்ள மரத்தேர், பலவீனம் ஆனதை தொடர்ந்து, அதற்கு பதிலாக, 36 அடி உயரத்தில், 40 லட்சம் ரூபாய் செலவில், புதிய தேர் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான நிதியை, பெரும் கொடையாளர்கள் மூலம் ÷ மற்கொள்வது என, தீர்மானிக்கப்பட்டது. கடந்த, 2013ம் ஆண்டு, தேரின் திருப்பணிகள் சென்னை, திருமழிசை, ஸ்தபதி கஜேந்திரன் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வந்த பணிகளில், 15 அடி உயரத்திற்கு தேவசாசனம், சிம்மாசனம் வரை பணிகள் முடிந்துள்ளன. சிற்ப வேலைப்பாடுகளுக்கான பணிகள் நடைபெற்று வந்தன. திட்ட மதிப்பீட்டையும் கடந்து, இதுவரை, 50 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
கிடப்பில்... மேலும், புதிய தேரை தயார் செய்வதற்கு ஏதுவாக, மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், 50 அடி உயரத்தில், 18 லட்சம் ரூபாயில், சிமென்ட் கூரை ஒன்றும் துரிதமாக ஏற்படுத்தி தரப்பட்டது. புதிய தேருக்கான பணிகளில், 50 சதவீதம் முடிந்த நிலையில், ஆறு மாத ங்களாக, மேற்கொண்டு பணிகள் எதுவும் தொடராமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. நிதி பற்றாக்குறையால், தேரின் திருப்பணிகள் நின்று போனதாக கூறப்படுகிறது. கிடப்பில் போடப்பட்ட தேரின் திருப்பணிகளை உடனடியாக துவக்கி, ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள தேர் திரு விழாவிற்குள், முடிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த ஆண்டும் பழையது: இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத இந்து அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: எதிர்பார்த்ததைவிட, கூடுதலாக செலவாகி வருகிறது. மேலும், 40 லட்சம் ரூபாய் வரை நிதி தேவைப்படுகிறது. பெரும் கொடையாளர்கள் மூலமே, தேரின் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மீண்டும் அவர்களிடம் எடுத்துரைத்து, திருப்பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம். இந்த ஆண்டும் பழைய தேரில், திருவிழா நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதற்காக தேரில் உள்ள பழுதுகளை சரி செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.