பதிவு செய்த நாள்
13
ஏப்
2015
11:04
திருப்பூர் : கிராமப்புற கோவில்களில் சிலை திருட்டு, கோபுர கலசம் மற்றும் உண்டியல் திருட்டு சம்பவங்கள் தொடர்வது, பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் புராதனமான, பழமை வாய்ந்த கோவில்கள் அதிகளவில் காணப்படுகின்றன; ஊர்தோறும் அம்மன் கோவில்கள், கிராமத்து கோவில்களும் அதிகமாக உள்ளன. பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், வெள்ளி மற்றும் தங்க நகைகளை உண்டியல் காணிக்கையாக செலுத்துகின்றனர். மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள கோவில்களை குறிவைக்கும் திருடர்கள், உண்டியல், சிலை, கலசங்களை திருடிச் செல்கின்றனர். கடந்த, 1999 முதல் 2010 வரை, அறநிலையத்துறைக்கு உட்பட்ட, 215 கோவில்களில், சிலை திருட்டு நடந்துள்ளது; இதில், 415 உலோக சிலைகள், 175 கற்சிலைகள் காணாமல் போயுள்ளன. இவற்றில், 25 உலோக சிலைகள், 30 கற்சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. கடந்த வாரம், காங்கயம் சிலியார்பாளையத்தில் உள்ள சிவன் கோவிலில், ஐந்து ஐம்பொன் சிலைகள் திருடு போய், மீட்கப்பட்டுள்ளன.
நகை கடைகள், ஜவுளி கடைகளில் பொருத்துவதுபோல, கோவில்களில் சுவாமி சிலைகள், காணிக்கைகளை பாதுகாக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டியது அவசியம். பக்தர்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய, வருமானம் உள்ள கோவில்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது; மாவட்டம்தோறும் திருமேனி பாதுகாப்பு மையம் அமைத்து, கோவில்களில் உள்ள உற்சவமூர்த்தி சிலைகள் அங்கு பாதுகாக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. விழா காலங்களில் மட்டும், சிலைகள் கோவிலுக்கு கொண்டு வரப்படும். கோவில் நகைகள், வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அதேநேரம், பழமையான, ஊரக பகுதி கோவில்களில், பாதுகாப்பற்ற தன்மை தொடர்கிறது. உண்டியல் திருட்டு, சிலை திருட்டு சம்பவங்கள் தொடர்வது, பக்தர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. வருமானம் தரக்கூடிய கோவில்களை மட்டுமின்றி, புராதனமான பழமையான கோவில்கள், கிராமத்து கோவில்களை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாழடைந்த கோவில்களை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.