தமிழ் ஆண்டுகள் அறுபதில் 29வது ஆண்டு மன்மத ஆண்டு. நவக்கிரகங்களில் இந்த ஆண்டுக்குரிய ராஜாவாக சனியும், மந்திரியாக செவ்வாயும் ஆட்சி செய்கின்றனர். இவ்வாண்டு கோயில் வழிபாடு சிறப்பாக நடக்கும். மக்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வர். மழை வளம் சிறக்கும். எல்லா உயிர்களுக்கும் குறைவில்லாத நன்மை உண்டாகும் என பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
மன்மத ஆண்டுக்கு ஈடான மற்ற ஆண்டுகள் ஆங்கிலம்-2015-2016 கொல்லம்-1190-1191 பசலி-1424-1425 சாலிவாகனம்(தெலுங்கு)-1936-1937 திருவள்ளுவர்-2046-2047 ஜகத்குரு சங்கராச்சாரியார்-2086 ஸ்ரீ மகாவீரர்(ஜைனர்)- 2542 ஸ்ரீ புத்தர் சகாப்தம்-2558-2559 கலியப்தம்-5116
புத்தாண்டு வழிபாடு: மன்மத ஆண்டின் ராஜா சனீஸ்வரர். இவருக்குரிய தெய்வமான சாஸ்தாவே இந்த ஆண்டின் தெய்வம். சபரிமலை ஐயப்பன், அய்யனார் ஆகியோரை வணங்கினால் தொடங்கும் செயல் எளிதாக நிறைவேறும். புத்தாண்டின் ராஜாவாக சனீஸ்வரர் இருப்பதால், இந்த ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வணங்கினால் சிரமங்களில் இருந்து விடுபடலாம். தினமும் ஓம் ஸ்ரீ வெங்கடேசாய நமஹ என்று 108 முறை ஜெபிக்கலாம்.