பதிவு செய்த நாள்
13
ஏப்
2015
03:04
காஞ்சி மகாபெரியவர் ஆசியுடன், அம்பாள் தன் ஒரு நிமிடப் பார்வையில், ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியஅதிசயத்தை தமிழ் புத்தாண்டு சமயத்தில் அறிவோமா!சென்னையைச் சேர்ந்த குடும்பத்தினர், தங்கள் நண்பருடன் மகாசுவாமிகளை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றனர். ஓய்வுக்காக வழியில் காரை நிறுத்தினர். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, குழந்தை சாலையைக் கடக்க ஆரம்பித்தது. குழந்தையின் பெற்றோர் இதைக் கவனிக்கவில்லை. அப்போது ஒரு லாரி குழந்தை மீது மோதி ரத்தவெள்ளத்தில் மிதந்தது.பெற்றோர் பதை பதைத்தார்கள். உடனடியாக காஞ்சிபுரம் விரைந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அவர்கள் முதலுதவி அளித்து, சென்னையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டார்கள். இவர்களுடன் சென்ற நண்பர் மட்டும் காஞ்சி மடத்திற்கு ஓடினார். மகாபெரியவரை தரிசித்து நடந்த விபரத்தைச் சொன்னார்.என்னைத் தரிசனம் பண்ண வர்றச்சயா ஆக்சிடென்ட் ஆயிடுச்சு, என்ற பெரியவர் கண்களை சற்று மூடினார்.ஒரு ஆப்பிளை அவரிடம் கொடுத்து, உடனே காமாட்சி கோயிலுக்குப் போ. அம்பாளை வணங்கி விட்டு, பழத்தை ஆஸ்பத்திரியில் இருக்கும் குழந்தையின் தலைமாட்டில் வைத்து விடு, என்றார்.வந்தவர் பழத்துடன் கோயிலுக்கு ஓடினார். நடை சாத்த தயாராகிக் கொண்டுஇருந்தார்கள். ஒரே ஒரு நிமிடம் தான்! அம்பாள் பச்சைப்பட்டில் இவர் கண்களில் பட்டாள்.
அதற்குள் நடை அடைத்தாகி விட்டது.அம்பாளின் கடைக்கண் பார்வையாவது கிடைத்ததே என்ற திருப்தியுடன், அவர் சென்னைக்கு ஓடினார். ஆஸ்பத்திரிக்குச் சென்ற போது தம்பதிகள் அழுதுகொண்டிருந்தார்கள். டாக்டர் இன்னும் சில மணி நேரம் கழியணும், என்னால் உறுதி சொல்ல முடியாது என்கிறார். என்ன நடக்கப் போகிறதோ! என்றனர்.வந்தவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் பெரியவர் பிரசாதமாகக் கொடுத்த பழத்தை வைத்தார்.சிலமணி நேரங்கள் ஓடின. குழந்தை கண்விழித்து விட்டதாகவும், அவளைப் பார்க்கலாம் என்றும் நர்சுகள் சொன்னார்கள்.தாயைப் பார்த்ததும் அம்மா என்றது குழந்தை. அது மட்டுமல்ல!அம்மா! இவ்வளவு நேரம் என் கூட ஒரு பாப்பா விளையாடிக்கிட்டு இருந்தாளே! அவளை எங்கே! என்றார்.குழப்பமடைந்த தாய்,இங்கே நீ மட்டும் தானே இருக்கே! வேறு குழந்தைகளே இல்லையே அம்மா! என்றதும், இல்லேம்மா! அவள் என் கூட தான் விளையாடிட்டு இருந்தா! பச்சைப் பட்டுப்பாவாடை கூட கட்டியிருந்தா! நீ பார்க்கலையா! என்றாள் குழந்தை.அப்போது தான் தரிசனம் செய்ய சென்றவருக்கு, காஞ்சிபுரத்தில் அம்பாளுக்கு அன்று பச்சைப்பட்டு சாத்தியிருந்தது மனக்கண் முன் வந்தது. குழந்தையுடன் விளையாட வந்து அவளைக் காத்தது சாட்சாத் காமாட்சியே என புரிந்து கொண்டார். மகாபெரியவரின் கருணையை வியந்தார். மகிமை மிக்க காமாட்சி தாய்க்கு திருப்பணி நடந்து வருகிறது. அவளது கடைக்கண் பார்வை உங்கள் மீதும் பட நீங்களும் திருப்பணியில் பங்கேற்கலாம். தமிழ் புத்தாண்டில் உங்கள் முதல் காணிக்கை காமாட்சிக்காக இருக்கட்டுமே! போன்: 044-2722 2610. (மகான் காஞ்சிப் பெரியவர்)