பதிவு செய்த நாள்
13
ஏப்
2015
03:04
இங்கிலாந்தில் பிறந்த எலிசபெத்பிரை என்பவரின் தந்தை ஜோசப் கர்னி. இவர் கர்னிஸ் பாங்கின் பங்குதாரர். தாயார் கேதரினும், பிரபல வங்கியை நடத்தி வந்த குடும்பத்தை சேர்ந்தவர். எலிசபெத்தின் 12ம் வயதில் அவரது தாயார் கேதரின்மரணமடைந்தார். குடும்பத்தில் மூத்தவர் என்பதால் தனது தம்பி, தங்கைகளைக் கவனிக்கும் பொறுப்பு தலையில் விழுந்தது. சிரமப்பட்டு ஆறு வருடங்கள் வாழ்க்கையை தள்ளியபிறகு 18 வயதில் வில்லியம் சேவரி என்றநற்செய்தியாளர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டார். பசியாயிருந்தேன், எனக்கு போஜனங் கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னை சேர்த்துக் கொண்டீர்கள்; வஸ்திரமில்லா திருந்தேன், எனக்கு வஸ்திரம் கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்;காவலில் இருந்தேன், என்னை பார்க்க வந்தீர்கள், என்ற இயேசு கிறிஸ்துவின் நற்செய்திகளை மையமாகக் கொண்டு பிரசங்கம் அமைந்தது.இயேசு கிறிஸ்து மனிதகுலத்தின் பாவங்களையும், அதன் விளைவான மரண தண்டனையையும் தம்மேல் ஏற்றுக் கொண்டு, சிலுவையில் தம் ஜீவனைக் கொடுத்தவர் என்ற செய்தி எலிசபெத்தை மிகவும் கவர்ந்தது. கூட்டம் ஒன்றில், அனேக பார்வையற்றோருக்கு நீ ஒளியாக இருப்பாய்; அனேக ஊமையருக்கு நீ பேச்சாக இருப்பாய்; அனேக முடவருக்கு நீ கால்களாக இருப்பாய், என்று பேசுவதைக் கேட்டார்.இதை ஆண்டவர் எனக்காகத் தான் உரைத்துஇருக்கிறார், என்று கூறினார். அதன்பிறகுஅவரது செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஏழைகள், வியாதியால் பாதிக்கப்பட்டோர், சிறைக்கைதிகள் மீது அவருக்கு மிகுந்த பரிவு ஏற்பட்டது. பழைய ஆடைகளை சேகரித்து ஏழைகளுக்கு கொடுத்தார். நோயாளிகளுக்காக ஜெபித்தார். குழந்தைகளுக்கு எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுத்தார். இங்கிலாந்திலுள்ள நியூகேட் சிறைச்சாலையில் ஒரு சிறிய கட்டடத்தில் கைதிகளும் அவர்களது குழந்தைகளும் இருப்பதைப் பார்த்தார். அந்த குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை துவங்கினார். பெண் கைதிகளுக்கு பைபிளில் உள்ள வாசகங்களை கற்றுக் கொடுத்தார். இதனால் சிறைக் கைதிகளின் மிஷனரி என்ற சிறப்புப் பெயரை பெற்றார்.இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணி இவரது நற்பணியை பாராட்டி நன்கொடை அளித்தார். பணக்காரரான எலிசபெத், இறைப்பணியையே முக்கியமாகக் கருதினார். 1845ல் மரணமடைந்த அவரது பணி இன்றும் புகழப்படுகிறது.