பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
11:04
மேலுார்: சித்திரை முதல் நாள், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மேலுார் வெள்ளலுார் மற்றும் தும்பைபட்டியில் வெற்றிலை பிரித்து கொடுக்கப்பட்டு விவசாய பணிகள் துவங்கப்பட்டன. வெள்ளலுார் நாடு என்றழைக்கப்படும் 58 கிராமங்களை சேர்ந்த 22 அம்பலகாரர்கள் தலைமையில் 22 இளங்கச்சிகள்(இளைஞர்கள்)மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள், மந்தையில் கூடினர். வெள்ளலுார் நாடு சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகளை, மந்தையில் வைத்து, ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்களையும் அழைத்து வெற்றிலை பிரித்து கொடுக்கப்பட்டு, அதை பொதுமக்களுக்கு பிரித்து கொடுத்தனர். இந்த வெற்றிலையோடு, உழவுக்கு உறுதுணையான கலப்பை, நெல்,ஆகியவற்றை வீட்டு பூஜை அறையில் வைத்து சுவாமி கும்பிட்ட பின், வயலுக்கு சென்று உழவு பணியை துவங்கினர். இதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்பது இம்மக்களின் நம்பிக்கை. தும்பைபட்டியிலும் கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகள் மந்தையில் வைக்கப்பட்டன. கீழையூர், கீழவளவு உட்பட பல்வேறு கிராம மக்கள் முன்னிலையில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பின், முஸ்லிம்கள் தலைமையில் ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்களின் பெயர் வாசிக்கப்பட்டு, வெற்றிலை பிரித்து கொடுக்கப்பட்டது. இந்து, முஸ்லிம், ஒற்றுமைக்காகவும், எல்லா வளமும் பெறுவதற்காகவும் இவ்விழா இங்கு கொண்டாடப்படுகிறது.