பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
12:04
சேலம்:சித்திரை பிறப்பை முன்னிட்டு, சேலம் கோவில்களில் நடந்த, விஷூ கனி தரிசனத்தில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சேலம், பெங்களூரு பைபாஸ் ரோடு, ஐயப்பா ஆஸ்ரமத்தில் சித்திரை பிறப்பை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து ஐயப்ப ஸ்வாமிக்கு அபிஷேகம், கனி தரிசனம், தீபாராதனை செய்யப்பட்டு, லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் நடந்த அன்னதானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பகவதி சேவை, அத்தாழ பூஜைக்கு பின் பக்தர்களுக்கு கனி வகைகள் வழங்கப்பட்டது. இரவில் ஹரிவராசனத்தை தொடர்ந்து நடை சாத்தப்பட்டது.
* சேலம் ராஜகணபதி கோவில் முழுவதும் காய், கனிகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராஜகணபதியை வழிபட்டுச் சென்றனர்.
* சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் ரோடு தர்ம சாஸ்தா ஆஸ்ரமத்தில் விஷூ கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஐயப்பன் அருள் பாலித்தார். தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜைகளில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* சேலம், பொன்னம்மாபேட்டை குருவாயூரப்பன் கோவிலில், கேரள முறைப்படி விஷூ கனி தரிசனம், சிறப்பு பூஜைகள் நடந்தது.சித்திரை பிறப்பை முன்னிட்டு, சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், அழகிரிநாத ஸ்வாமி கோவில், சுகவனேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், உத்தமசோழபுரம் கைலாசநாதர் கோவில், ஊத்துமலை முருகன் கோவில், கந்தாஸ்ரமம் உட்பட சேலம் மாநகர், புறநகரில் உள்ள கோவில்களில் சித்திரை பிறப்பை முன்னிட்டு நடந்த விஷூ கனி தரிசனம், சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.பக்தர்களின் வருகை அதிகரித்ததை அடுத்து, அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், கோவில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.