பண்டைய காலத்தில் சிந்து சமவெளி மக்கள் அனைவரும் முருகனையே முழுமுதற் கடவுளாக வழிபட்டுள்ளனர். முருகன் அப்போது காக்கும் தெய்வமாக, காவல் கடவுளாகவே வழிபடப்பட்டிருக்கிறார். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர், அஸ்கோ பர்ப்போலா. சிந்து சமவெளி நாகரிகம் பற்றி ஆய்வு செய்த இவர், தனது அறிக்கையில்தான் வேலவன் வழிபாட்டைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். முற்கால மனிதர்களின் முழு முதற் கடவுளாக முருகனே வணங்கப்பட்டிருக்கிறான். குறிப்பாக போர்க்காலங்களில் ஆண்களுக்கும், பெண்கள் கர்ப்பமாக உள்ள சமயங்களிலும் அவர்களுக்கு கந்தனே காத்து நிற்பான் என்ற நம்பிக்கை அப்போதே நிலவியதாம். போருக்குச் செல்லும் ஆண்களுக்கு வேலவனை வேண்டிக்கொண்டு கைகளில் காப்பினை அணிவித்து வாழ்த்தி அனுப்புவார்கள். அதுபோலவே கர்ப்பிணிகளுக்கும் முருகனைக் கும்பிட்டு காவலாக காப்பாக இருக்கும்படி வேண்டி வளையல் போன்ற காப்பினை அணிவிப்பார்களாம். பிரசவகாலம் வரை பெண்களை உடன் இருந்து முருகனே காப்பாற்றுவான் என்ற அந்த நம்பிக்கையே இன்று கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்படுவதன் அடிப்படைக் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். மொகஞ்சதாரோவில் கிடைத்த ஆதாரங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் வேதங்களும் நம் முன்னோரும் அப்போதே சொல்லியிருக்கிறார்கள் கந்தனே கவசமாகவும் காப்பாகவும் இருப்பான் என்று. கலியுக தெய்வம் கந்தனின் காலடியை வழிபடுங்கள். தன் அருளால் காத்து, உங்கள் மனம் குளிரும் வாழ்வளிப்பான் மயில்வாகனன்.