பதிவு செய்த நாள்
16
ஏப்
2015
12:04
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியக்கோவில் சித்திரை பெருவிழாவையொட்டி, 100 ஆண்டுகளுக்கு பின், வரும், 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா, 17 நாட்கள் நடத்தப்படும். பழமை வாய்ந்த மரத்தேர் சிதிலமடைந்ததை தொடர்ந்து கடந்த, 100 ஆண்டுகளாக, சித்திரை திருவிழாவில் தேரோட்டம் தடை பட்டிருந்தது. தஞ்சை பெரியகோவிலுக்கு, புதிய தேர் நிர்மாணிக்குமாறு பக்தர்களிடையே கோரிக்கைகள் வலுத்தது. தேவஸ்தானம் சார்பிலும், இதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தஞ்சை பெரியகோவிலுக்கு, 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் அமைக்க அரசு அனுமதி வழங்கியது. ஆகம விதிகளின்படி கலைநயத்துடன் கூடிய புதிய தேர் நிர்மாணிக்கும் பணிகளை துவக்கினர். அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ள நிலையில், தேரோட்டத்துக்காக தேர் தயாராக உள்ளது. பெரியகோவில் சித்திரை பெருவிழா இன்று (16ம் தேதி) துவங்கி, மே, 2ம் தேதி வரை நடக்கிறது. இன்று காலை, மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டு பெருவிழா துவங்குகிறது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 20ம் தேதி திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. 100 ஆண்டுகளுக்கு பின் வரும், 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.ஃ சித்திரை பெருவிழா ஏற்பாடுகளை, பெரியக்கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.