வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க சுயநலத்தின் அளவும் உயர்ந்துகொண்டே போகிறது. வீட்டிற்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதில் தவறில்லை. ஆனால், ஆடம்பரத்தில் திளைத்துதேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பவர்களையே அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம். போதாக்குறைக்கு கொடிய பழக்கங்களுக்கும் இந்த வருமானம், மக்களை இழுத்துச் செல்கிறது.இங்கிலாந்தில் வசித்த ஜான்வெஸ்லி என்ற மதபோதகரின் ஆண்டு வருமானமே 30 பவுண்டுகள்தான். இதில் 2 பவுண்டை தர்மம் செய்வார். மீதி அவரது சுயதேவைக்கு பயன்பட்டது. ஒருகட்டத்தில் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆனார். இதனால் வருமானம் 1600 பவுண்டை எட்டியது. தனதுசெலவுகளை உயர்த்திக் கொண்டார். வாழ்க்கை முறையே மாறிப்போய்விட்டது. ஏழையாக இருந்தபோது, நடந்ததையெல்லாம் மறந்து விட்டார். வீட்டை அலங்கரித்தார். பணம் காலியாகி விட்டது. ஒருநாள், அந்த அறையை சுத்தம் செய்ய வேலைக்கார சிறுமி நுழைந்தாள். அப்போது குளிர்காலம். குளிரைத்தாங்கும் அளவிற்கு உரிய உடையை அவள் அணிந்திருக்கவில்லை. கைகள் நடுங்கின. அந்தச்சூழலை பார்த்த ஜான்வெஸ்லி, மிகவும் வருத்தப்பட்டார். இப்போதுதான்தேவையற்ற ஒரு விஷயத்திற்காக, பணத்தை அள்ளிக் கொடுத்தோம். அந்த பணத்தில் இவளுக்கு நான்கைந்து கோட் எடுத்துக் கொடுத்திருக்கலாமே? இவளைப்போல எத்தனையோ ஏழை சிறுமிகள் உணவின்றி, உடையின்றி தவித்துக் கொண்டிருப்பார்களே, அவர்களுக்கு உதவியிருக்கலாமே! என்ற எண்ணம் ஏற்பட்டது.கடவுள் நம்மை பற்றி என்ன நினைப்பார்? என்று சிந்தித்தார்.தன்னிடத்தில் இருந்த இரக்க உணர்வை அபரிமிதமான பணம் பறித்து விட்டதை நினைத்து வெட்கப் பட்டார். அதன்பிறகுமனம் மாறினார்.முன்பு போலவே28 பவுண்டுக்குள் தனது செலவை நிறுத்திக் கொண்டார். மீதியைஏழைகளுக்குகொடுத்தார்.தர்மம் செய்ததால் இவர் வருமான வரி கட்டவில்லை. அதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட்டனர். அதிக வருமானம் இருந்தும் ஏன் வரி கட்டவில்லை? என கேட்டனர். ஆனால், அவரது வீட்டை சோதனையிட்ட பிறகுதான் அங்கு2 வெள்ளிக்கரண்டிகளைத் தவிர, வேறு எதுவுமே இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அவரை விட்டுவிட்டனர். நமது கையில் பணம் வரும்போது, அத்தியாவசியமான தேவைகளுக்கு போக, மீதி பசியுள்ளவனுக்கு ஆகாரமாக மாற வேண்டும். தாகமுள்ளவனுக்கு பானமாக மாற வேண்டும். அரை நிர்வாணத்துடன் திரிபவர்களுக்கு உடையாக மாற வேண்டும். அனாதை குழந்தைகளுக்கும், கணவனை இழந்தவர்களுக்கும் அது ஆறுதலாக வேண்டும். பார்வையற்றோருக்கு பார்வை கொடுக்கவும், முடமானவர்களுக்கு காலாகவும் வேண்டும்.