பதிவு செய்த நாள்
30
ஜூன்
2011
10:06
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஒருகிலோ 600 கிராம் எடையில் புதிய தங்கவேல், பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டது. கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி, மலை அடிவார பாறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவரது கரத்தில் உள்ள வேலுக்கே பக்தர்கள் கொண்டுவரும் பால் உட்பட அபிஷேகங்கள் நடக்கிறது. பல நூற்றாண்டுகளாக சுவாமியில் கரத்தில் இருந்த நான்கரை அடி உயரத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட அந்த தாமிர வேல், கடந்த ஆண்டு பழுதடைந்தது. அந்த வேலில் தங்க பேப்பர்கள் பொருத்தப்பட்டு, வேலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதற்கு பதிலாக மூலவர் கரத்தில் சாத்துப்படி செய்ய முற்றிலும் தங்கத்தால் ஆன புதிய வேல் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக தனி உண்டியல் வைக்கப்பட்டது. இந்த வேல் திருப்பணிக்கு அரசியல் முக்கிய பிரமுகர்கள் சிலர் வழங்கிய பல லட்சம், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய பணம் மற்றும் உபய காணிக்கை ரசீது மூலம் பெற்ற பணத்தில் ஐந்து கிலோ எடையில் புதிய தங்கவேல் சமீபத்தில் செய்யப்பட்டது. அந்த வேலின் மேல் பகுதியில் உள்ள அலகு பெரிய அளவில் இருந்ததால், சுவாமி கரத்தில் சாத்துப்படி செய்வதும், பால் அபிஷேகத்திற்கு பயன்பத்துவதிலும் சிரமம் என்பதால், சில நாட்களே மூலவர் கரத்தில் புதிய தங்க வேல் இருந்தது. முக்கிய திருவிழா நாட்களில் அந்த வேலை பயன்படுத்த நிர்வாகம் முடிவு செய்து கருவறையில் வைக்கப்பட்டது. சுவாமியின் கரத்தில் மீண்டும் பழைய வேல் சாத்துப்படி செய்யப்பட்டது.
புதிய தங்க வேல்: ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்பு, ஜூன் 6ல் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது முருக பக்தர்களான முக்கிய பிரமுகர்களால் பழைய வேல் வடிவில் முற்றிலும் தங்கத்தால் ஆன புதிய தங்க வேல் செய்து கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினர். அந்த வேல் தற்போது மூலவர் கரத்தில் சாத்துப்படி செய்யப்பட்டு, அதற்கு அபிஷேகங்கள் நடக்கிறது.