பதிவு செய்த நாள்
30
ஜூன்
2011
10:06
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவிலில், பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள ஆறு அறைகளில், மூன்று அறைகளை திறந்து கணக்கெடுத்ததில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர, மரகத, வெள்ளி நகைகளும், மதிப்பு மிக்க கலைப் பொருட்களும் இருப்பது தெரியவந்தது. கேரளா, திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில், பூமிக்கடியில் ஆறு அறைகள் உள்ளன. இவற்றில், இரு அறைகளில் ஒன்றில் நித்ய பூஜைக்கான பொருட்களும், மற்றொன்றில் கோவில் உற்சவத்திற்கு பயன்படும் பொருட்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நித்ய பூஜைக்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறை, தினமும் திறக்கப்படும். உற்சவ பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறை, ஆண்டுக்கு ஐந்து முறை மட்டுமே திறக்கப்படும். மீதமுள்ள நான்கு அறைகள், பல ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. அந்த அறைகளில் விலை மதிப்பற்ற பொருட்களும், புதையலும், தங்கக் கட்டிகளும் இருக்கலாம் என, பக்தர்களிடையே பேச்சு நிலவியது. அதனால், ஆறு அறைகளிலும் உள்ள அரிய வகை பொருட்கள் குறித்தும், விலை மதிப்பற்ற நகைகள் குறித்து கணக்கெடுக்கவும், அவற்றை ஆய்வு செய்து தரம், மதிப்பு, எடை போன்றவற்றை மதிப்பிடவும், கேரள ஐகோர்ட்டின் இரண்டு முன்னாள் நீதிபதிகள் உட்பட ஏழு பேர் அடங்கிய குழுவை, சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இக்குழுவினர், இரு தினங்களாக கோவிலில் மூன்று அறைகளை திறந்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, 400 தங்க மாலைகள் உட்பட பல்வேறு தங்கம், மரகதம், வைர, வெள்ளி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவை கணக்கிடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் கணக்கெடுத்தவை மட்டும் 400 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் என கூறப்படுகிறது. இதுவரை மூன்று அறைகளில் உள்ள பொருட்கள் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மூன்று அறைகளில் உள்ள பொருட்களையும் கணக்கெடுக்க வேண்டும். அவற்றில் உள்ள பொருட்களையும் கணக்கெடுத்தால், மதிப்பு மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.