நாகர்கோவில்: பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை கணபதி ஹோமமும், அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. காலை 9.10 மணிக்கு மேள, தாளத்துடன் கொடிப்பட்டத்தை நான்குரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து காலை 9.40 மணிக்கு கொடிப்பட்டத்தை தெற்கு மண்மடம் திலீப் நம்பூதிரி கொடிமரத்தில் ஏற்றிவைத்தார்.
கொடி பீடத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாரதனையை வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா நடத்தினார். அதன்பின்ன்ர் தேர்களுக்கு கால் நாட்டும் வைபவம் நடைபெற்றது. இதில் சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் முருகேஷ், அ.தி.மு.க, விவசாய அணி பொருளாளர் ஆ.கோ. ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 28-ம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது அம்மன்தேர், பிள்ளையார் தேர், இந்திரன் தேர் ஆகிய 3 தேர்கள் உலாவர உள்ளன. பின்னர் இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சவாமி திரவீதி உலாவும், 11 மணிக்கு சப்தா வர்ணகாட்சியும் நடக்கிறது. 29-ம் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்திற்கு சுவாமியும், அம்மாளும், பெருமாளும் எழுந்தருளும் தெப்பத்திருவிழா நடைபெற இருக்கிறது. இரவு11 மணிக்கு வாண வேடிக்கையும், நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டும் நடக்க உள்ளது.