பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
12:04
வேலாயுதம்பாளையம் :வேட்டமங்கலம் அருகே குளத்துப்பாளையத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு, 1,008 சங்காபிஷேக விழா நடந்தது. இக்கோவில் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த மாதம், 9ம் தேதி நடந்தது. தொடர்ந்து, நாள்தோறும் மண்டல அபிஷேகம் மாலை, 7 மணிக்கு நடந்து வந்தது. 48வது நாள் மண்டல அபிஷேக நிறைவு விழா நடந்தது.விழாவுக்காக, பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று, புனிதநீராடி தாரை தப்பட்டைகள் முழங்க, புனிதநீர் எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, விநாயகர், பகவதி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர், பழச்சாறு, திருமஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.இதையொட்டி, 1,008 வலம்புரி சங்குகளில் புனித நீர் ஊற்றி, விநாயகர் வழிபாட்டுடன் சங்கு பூஜை துவங்கியது. பின்னர் ஸ்ரீசப்தஹோமம், துர்காதுத்த ஹோமம், மூலமந்திர மற்றும் மால மந்திர ஹோமம், திரவிய பொருட்களால் சன்னதி ஹோமங்கள் நடத்தப்பட்டன. பூர்ணாஹுதியைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.ஹோமங்களை கரூர் முரளி சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் மேற் கொண்டனர். சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.