பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
12:04
திருத்தணி: கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று, 1011வது ஜெயந்தியை முன்னிட்டு, 108 பால்குட ஊர்வலம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ளது வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும், சித்திரை மாதம் 15ம் தேதி, பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், நேற்று, 1011வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, காலை 7:30 மணிக்கு, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து, 108 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக, முக்கிய வீதிகள் வழியாக கோவில் வளாகம் அடைந்தனர். தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. காலை 10:00 மணிக்கு குங்கும அர்ச்சனையும், பிற்பகல் கோடி அர்ச்சனையும் நடந்தன. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.