பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
12:04
கூடலூர் : தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சீரமைப்பு பணிகள் செய்வதற்கும், கட்டடப்பணிகள் செய்வதற்கும் தேசிய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், புலிகள் சரணாலய சட்டம், சுப்ரீம் கோர்ட் அனுமதி தேவை என தேக்கடி புலிகள் சரணாலய இணை இயக்குனர் சஞ்சயன்குமார் தெரிவித்தார்.
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் அடுத்த மாதம் 4ல் சித்ராபவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. விழா கொண்டாடுவது தொடர்பாக இரு மாநில கலெக்டர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் தேக்கடியில் சில தினங்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக இரு மாநில கலெக்டர்கள் தலைமையிலான ஆலோசனைக்கூட்டம் நேற்று தேக்கடி ராஜிவ் காந்தி அறிவியல் மையத்தில் நடந்தது. தேனி கலெக்டர் வெங்கடாசலம், இடுக்கி கலெக்டர் ரதீசன், தேக்கடி புலிகள் சரணாலய இணை இயக்குநர் சஞ்சயன்குமார், இந்திய தொல்லியல் துறை இயக்குநர் பிரேம்நாத் மற்றும் இருமாநில பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். சில தினங்களுக்கு முன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், கோயிலுக்கு அதிகாலை 5 மணியில் இருந்து பக்தர்கள் செல்ல அனுமதி அளிப்பது என கூறப்பட்டிருந்தது. அதை மாற்றி, அதிகாலை 6 மணியில் இருந்து அனுமதிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கோயில் வளாகத்தில் கட்டப்படும் வாழை மரங்களை 6 ஆக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்றபடி கடந்த ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட, இந்தியத் தொல்லியல் துறை இயக்குனர் பிரேம்நாத் பேசும்போது, "மூன்று தினங்களுக்கு முன் கண்ணகி கோயிலில் ஆய்வு பணிகளை மேற்கொண்டேன். கண்ணகி கோயில் 1800 ஆண்டுகளுக்கு முந்தய வரலாற்று சிறப்பு மிக்க கோயிலாக உள்ளது. அந்த நேரத்தில் கோயிலின் அமைப்புக்கான புகைப்படங்களோ அல்லது அதற்குரிய தகவல்களோ இருந்தால், கோயிலை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க முடியும். கோயில் தற்போதுள்ள நிலையில் சீரமைப்பதற்கு திட்டம் வகுக்க வேண்டியுள்ளது என்றாார். இதனைத் தொடர்ந்து, தேக்கடி வனத்துறை இணை இயக்குநர் சஞ்சயன்குமார் பேசும்போது, "மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி புலிகள் சரணாலயமாகும். இப்பகுதியில் சீரமைப்பு பணிகள் செய்யவோ, கட்டடம் கட்டுமான பணிகள் செய்யவோ ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஆனால் கண்ணகி கோயிலில் புதியதாக எந்தப் பணிகள் செய்வதாயிருந்தாலும் தேசிய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், புலிகள் சரணாலய சட்டம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளின் படியும், சுப்ரீம் கோர்ட் அனுமதி பெற்ற பின்னர் மட்டுமே செய்ய முடியும் என்றார்.