ராமர் கடலில் அணை கட்டும்போது, பெரிய வானரங்கள் எல்லாம் பாறாங்கற்களை கொண்டு வந்து கடலில் போட்டன. இந்த புண்ணிய காரியத்தில் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என அணில் யோசித்தது. உடனே கடலில் மூழ்கி தன் உடலை ஈரமாக்கி கொண்டு, அப்படியே கரையின் மணலில் புரண்டு எழுந்தது. பிறகு தன் ஈர உடலில் ஒட்டிக்கொண்டிருந்த மணலை, வானரங்கள் கட்டும் அணை மீது சென்று உடலை சிலிர்த்தது. இப்படி செய்து கொண்டிருந்த அணிலின் பாசத்தையும், தானும் ராமருக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்ற உயர்ந்த எண்ணத்தையும் பார்த்தார் ராமர். அந்த அணிலை அன்புடன் தூக்கி அதன் முதுகில் வருடிக்கொடுத்தார். ராமரின் இந்த வருடல் தான் அணிலின் முதுகில் மூன்று கோடுகளாக உள்ளது என்பர்.