பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
12:04
மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவில், மகாகும்பாபிஷேகம் வரும் ஜூன், 7ம்தேதி நடைபெறுவதை அடுத்து, மண்டபங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடக்கின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில், காரமடை அரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒரு கோடி ரூபாய் செலவில், கலை நயத்துடன், புதிய ஏழுநிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு கோடி ரூபாய் செலவில், எழில்மிகு விமானங்கள், சுற்றுப்பிரகார மண்டபங்கள், கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், தாயார் சன்னதி, யாகசாலை, ராஜகோபுர ஆகிய முன் மண்டபங்கள், திருமதில்கள் அனைத்தும், அழகுடனும், பொலிவுடனும் கலைக்கோவிலாக சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், அனைத்து மண்டபங்களின் மேல்பகுதியில் வர்ணம் பூசி, அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மகா கும்பாபிஷேக விழா, ஜூன் 3ம் தேதி துவங்குகிறது. ஜூன் 6 மாலை, கோபுர கலசங்கள் நிறுவுதலும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடைபெறுகிறது. ஜூன் 7ம் தேதி காலை, ஆறாம் கால யாக பூஜையை அடுத்து, 9:15 மணிக்கு ராஜகோபுரம், கோவில் கோபுரம், மூலவர் சுவாமிகளுக்கு, புனித தீர்த்தங்கள் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜீவானந்தம், செயல் அலுவலர் நந்தகுமார், கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.