பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
01:04
மதுரை : மதுரை மாநகராட்சி சில லட்சம் ரூபாய் செலவில், நடத்தி வந்த சித்திரை திருவிழாவிற்கு இந்த ஆண்டு செலவினங்கள் ரூ. ஒரு கோடியை தொடும் நிலையில் நடந்து வருகின்றன. அதற்கேற்ப எந்த புதுமையான பணிகளும் நடக்கவில்லை. மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் துவங்கியதுமே மாநகராட்சியும் தன் பங்கிற்கு சுறுசுறுப்பாகும். சுகாதார பணிகளை சுட்டிக்காட்டி ரூ.பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து தளவாட பொருட்களை வாங்கியுள்ளது. அந்த பொருட்கள் 5 நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மீண்டும் இதைபோல் இரண்டு மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். குப்பைகளை அகற்றுவதற்காக 2 ஆயிரம் கூடைகள், துடைப்பம், 100 டன் சுண்ணாம்பு, 10 டன் பிளீச்சிங் பவுடர் இப்படி தலை சுற்றவைக்கும் கணக்குகள் காட்டப்பட்டுள்ளன. தவிர, கிருமிநாசினிகள் வாங்க ரூ.12 லட்சம், சுகாதார தளவாடங்கள் வாங்க ரூ.9.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களாக வைகை ஆற்றின் தென்கரையில் 170 பேர், வடகரையில் 370 பேர் பணிபுரிவதாகவும் கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பொறியியல் பிரிவும் தன் பங்கிற்கு ரூ.62 லட்சத்தில் பணிகளை நடத்துகிறது. இதில் முக்கியப்பணி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் தற்காலிக பாலம் அமைப்பது தான். ஏற்கனவே இங்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கும் பகுதியில் மணல் மூடைகள் வைத்து சாய்வுதளம் அமைத்தல், அந்த பகுதியை துாய்மைப்படுத்துதல், கொட்டகை அமைத்தல், மின்விளக்கு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்துதல் இப்பணிகள் மட்டும் தான் இப்பிரிவு சார்பில் செய்யப்படுகிறது. தேரோட்டம் நடக்கும் வீதிகளில் கூட தார்சாலை அமைக்காமல் ஒட்டுப்போடும் பணிகள் தான் நடந்துள்ளன. இதற்காக இத்தனை மெகா ஒதுக்கீடா என மாநகராட்சி ஆச்சரியப்பட வைக்கிறது.இந்த ஆண்டிற்கான மொத்த செலவினங்களாக ரூ.93,36,350க்கு திட்டமதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன. விழா முடிந்த பின் இந்த தொகை ரூ.ஒரு கோடியை தாண்டும். சித்திரை திருவிழாவிற்கு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் அதே மரபுகளும், அதே ஏற்பாடுகளும் தான் நடந்து வருகிறது. ஆனால் செலவினங்களை மட்டும் ராக்கெட் வேகத்தில் எல்லோரும் வியக்கும் வகையில் மாநகராட்சி பறக்கவிட்டு வருகிறது.