பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
02:04
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள், நடராஜரை தரிசிப்பதற்கு முன்னதாக, அருகில் உள்ள அவரது துணைவியாரான சிவகாமசுந்தரி அம்பாளை தரிசனம் செய்த பின்னர்தான் நடராஜரை வழிபடுவர். சிவகாமி அம்பாள் திருக்கோவிலின் கருங்கல் துாண்கள், மரத் துாண்களைபோல அழகிய, நுட்பமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. சிற்ப வேலைப்பாடுகளும் மிகுதியாக உள்ளன. அம்பாள் சிவகாமசுந்தரி, அருள்பொழியும் திருநயனங்களோடு, பேரழகுமிகு திருக்கோலத்தில், கருணையே உருவாக, கிழக்கு முகமாக நின்று, பக்தர்களுக்கு அருள்புரிந்து கொண்டிருக்கிறாள். அம்பாள் திருக்கோவில், அழகிய கோபுரம், விமானம், பிரகாரம், கொடிமர மண்டபம் முலியவற்றோடு அமைந்த ஒரு தனிப்பெருங் கோவிலாக திகழ்கிறது. இக்கோவில் பிரகாரத்தை கட்டுவித்தவன், மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவனாகிய கூத்தன் என்பவனாவான். இவனே, பிரகாரத்து திருமாளிகையையும் அமைத்துள்ளான். இப்பிரகாரத்தின் வடமேற்கு துாண் ஒன்றில் இவனது திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின் கொடிமரம் அமைந்துள்ள மண்டபம் மிகவும் விசாலமானது. இடைத்தாங்கல் ஏதும் இல்லாத இத்தகைய அகலமுள்ள கருங்கல் மண்டபம், வேறு எங்கும் இன்றில்லை. இரண்டாவது பிரகாரத்தில், நாட்டிய கலையின் அபிநய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அம்பாள் திருக்கோவிலின் உள்பிரகாரத்தில் சித்ரகுப்தர் சன்னதி உள்ளது. தென்மேற்கு மூலையில், சங்கரடஹர விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, தேவி மகாத்மியம், பழைய சித்திரக்கலை மூலமாக விளக்கப்பட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் வடக்கு பக்கத்தில் ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது. இது, ஆதிசங்கரரால் நிறுவப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டதாக வரலாற்றுச் செய்தி உள்ளது. இந்த ஸ்ரீசக்கரத்தின் முன்பாக பிரார்த்தனை செய்தால், நினைத்தது நடக்கும். தந்தைக்கு தலைப்பிள்ளை, தாய்க்கு கடைப்பிள்ளை என்று முதுமொழி உண்டு. அதாவது, தந்தைக்கு முதல்பிள்ளை செல்லப்பிள்ளையாகவும், தாய்க்கு கடைசிப்பிள்ளை செல்லப்பிள்ளையாகவும் விளங்குவர் என்பது முதுபொழியின் பொருளாகும். இதற்கேற்ப, தெற்கு முகமாக திருத்தாண்டவம் புரிந்தருளும் நடராஜ பெருமான், மூத்தப்பிள்ளையாக முக்குறுணி விநாயகரை தமது வலப்பாகத்தில் கிழக்கு முகமாக இருத்திக் கொண்டு விளங்குகிறார். அன்னை சிவகாம சுந்தரியோ, தம் செல்லப் பிள்ளையாக, இளைய புள்ளையாகிய பாண்டிய நாயகர் என்ற சுப்ரமணியரை தம் இடப்புறத்தில் எழுந்தருள செய்து மகிழ்வது சிறப்பாகும்.