பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
02:04
சென்னிமலை : சோழ மன்னரால் அமைக்கப்பட்ட, பல நூறு ஆண்டு பழமையான முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், மே, 1ம் தேதி நடக்கிறது. சென்னிமலை அடுத்த முருங்கத்தொழுவு கிராமத்தில் வடிவுள்ள மங்கை சமேத பிரமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சிவன், மேற்கு நோக்கி அ மர்ந்து அருள்பாலிக்கிறார். இங் கு, கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மூலவர் விமானம், அம்மன் விமானம், மகா மண்டபம், சோபன மண்டபம், நுழைவு வாயில் மண்டபம் அமைத்து, பரிவார மூர்த்திகள் மகாகணபதி, கன்னிமூலகணபதி, வள்ளி, தெயவானை சமேத சுப்பிரமணியர், சூரியன், சந்திரன், துர்க்கை, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, நவகிரகம் மற்றும் தனி சன்னதியில் சனீஸ்வரர், காலபைரவர் ஆகிய மூர்த்திகளுக்கு உரிய சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. திருக்குளம் தூர்வாரப்பட்டு, படித்துறை அமைத்து, குளத்தின் நடுவில் பெரிய நந்தி அமைக்கப்பட்டுள்ளது.கும்பாபிஷேக விழா, 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று, காலை கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். மாலையில், யாகசாலை பூஜை துவங்கியது.இன்று, காலை, இரண்டாம் கால யாக பூஜையும், மே, 1ம் தேதி காலை, 5 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், கடம் புறப்பாடு, காலை, 7.50க்கு விமானங்களுக்கு கும்பாபிஷேகம், காலை, 8.15 மணிக்கு வடிவுள்ள மங்கை சமேத பிரமலிங்கேஸ்வரர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று, காலை முதல் அன்னதானம் நடக்கிறது.