வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழா ஏப்., 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஒன்பதாம் நாளில் அம்மன் கரகம் எடுக்கும் வைபவம் நடந்தது. நடுஇரவில் ஊரணிக்கரைக்கு சென்று பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர். இறுதிநாளில் காலையில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. பின்னர் பூக்குழித் திருவிழாவிற்காக அக்னி வளர்க்கும் நிகழ்ச்சி துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டபின் பூசாரி தீபாராதனை சூடம் ஏற்றி அக்கினி ஏற்றினார். அதை தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் நேர்த்திக்கடனுக்காக கொண்டுவந்த எண்ணெய்யை அக்னிகுண்டத்தில் ஊற்றினர். நேற்று மாலையில் பூக்குழி நடந்தது. காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் ஊர்வலமாக சுற்றிவந்து அக்னிகுண்டத்தில் தீமிதித்தபடி கோயிலுக்குள் சென்றனர். சில பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தபடியும், குழந்தைகளை தூக்கிச் சென்றபடியே தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாக்கமிட்டியினர், ஊர்பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர்