பதிவு செய்த நாள்
04
ஜூலை
2011
11:07
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த அக்ரஹாரம் சிவாஜி நகரில் உள்ள பாண்டுரங்க ருக்மணி கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த அக்ரஹாரம் சிவாஜி நகரில் சுமார் 300 வருடங்கள் பழமை வாய்ந்த பாண்டுரங்க ருக்மணி கோவில் உள்ளது. இந்த கோவில் புணரமைக்கப்பட்டு இதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, 1ம் தேதி மாலை சிலை விக்ரஹ கிராம உற்சவம், கணபதி பூஜை, மங்களார்த்தி முதல் கால யாக பூஜை நடந்தது. 2ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி பூஜை, யாகசாலை பிரவேசம், கலச ஆராதனை, கணபதி ஹோமம், கோ பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு கலச பூஜை, சிரதி வாசம், தானியாதி வாசம், மஹா மங்களார்த்தி நடந்தது. இரவு 12மணிக்கு சிலை விக்ரஹ அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கோபுரகலச பிரதிஸ்டை பூஜை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், திரவாராதனம், வசோத்தாரா யாத்ராதானம், மஹா பூர்ணாஹீதி நடந்தது. 9 மணிக்கு மஹா கும்பாபிஷேம் நடந்தது. 10 மணிக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவில், கர்நாடகா மாநில முன்னாள் அமைச்சர் சிந்தியா, கிருஷ்ணகிரி டி.ஆர்.ஓ., பிரகாசம், பெங்களூரு மராட்டிய சமாஜ் தலைவர் ஷியாம் சுந்தர் கெய்க்வாட், தே.மு.தி.க., மாநில மாணவரணி துணை தலைவர் சங்கர்ராவ் காலே ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ருக்மணி சமேத பாண்டுரங்க பக்த மண்டலி தலைவர் நாகோஜிராவ் நிக்கம், கோவில் கட்டிட அமைப்பாளர் ஜனார்த்தனராவ் மற்றும் சிவாஜி நகர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.