பதிவு செய்த நாள்
04
ஜூலை
2011
11:07
சேலம்: சேலத்தில் கொட்டும் மழையிலும், பகவான் ஜெகநாதரின் ரத யாத்திரை நேற்று நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பகவான் ஜெகநாதர், தன்னுடைய சகோதரர் பலராமர் மற்றும் தங்கை சுபத்ரா மஹாராணியுடன் பிரம்மாண்டமான ரதத்தில், சேலம் நகரின் தெருக்களில் நேற்று, திருவீதி உலா வந்தார். சேலத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து, 28 அடி உயரமுள்ள ஜெகநாதர் ரத யாத்திரை புறப்பட்டது. ரதத்தில் ஜெகநாதர், அவருடைய சகோதரர் பலராமர் மற்றும் தங்கை சுபத்ரா மஹாராணி ஆகியோர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருளினர். அப்போது, மழை தூற ஆரம்பித்தது. தொடர்ந்து மழை பெய்தாலும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ஆரவாரத்துடன் இழுத்துச் சென்றனர். ரத யாத்திரையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். யாத்திரையின் போது, வழிநெடுகிலும் பொதுமக்கள் பகவான் ஜெகநாதரை வழிபட்டனர். கிருஷ்ண பக்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், பிரார்த்தனை பாடல்கள், பஜனைகளை பாடி வந்தனர். ரதயாத்திரை கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, முதல் அக்ரஹாரம், ராஜகணபதி கோவில், கமலா மருத்துவமனை, பட்டகோவில் தெரு, சின்ன கடைவீதி, கோட்டை மாரியம்மன் கோவில் வழியாக சென்று கோட்டை மைதானத்தில் நிறைவு பெற்றது. மாலை 6.30 முதல் 8.30 மணி வரை, கோட்டை மைதானத்தில் பஜனை, ஜகநாதரின் புகழ் பற்றிய உபன்யாசம் நடந்தது. பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், சேலம் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) தலைவர் கோகுல் சந்திரதாஸ், செயலாளர் சித்த ஹரிதாஸ் உள்பட கிருஷ்ண பக்தர்கள் பங்கேற்றனர்.