திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2015 04:05
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இதில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகியது. 11ம் தேதி மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்பணம் முடிந்து நேற்று காலை தர்பாரண்யேஸ்வரர், சனிஸ்வர பகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை முடிந்து கொடியேற்றம் நடந்தது.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை விநாயகர், சுப்ரமணியர் ஆகியேர் உற்சவமும், 22ம் தேதி அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. 23ம் தேதி செண்பக தியாகராஜர் சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளுதலும், 27ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.
29ம் தேதி காலை 8.30 மணிக்கு செண்பக தியாகராஜர் தேரில் எழுந்தருள தேர் திருவிழா நடக்கிறது. 30ம் தேதி தங்க காக்கை வாகனத்தில் சனிஸ்வர பகவான் வீதி உலாவும், 31ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.