வைகாசி அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2015 11:05
ராமேஸ்வரம்: வைகாசி அமாவாசையை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அமாவாசையான நேற்று, ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி, புரோகிதர்கள் மூலம் திதி பூஜை செய்து, கடலில் புனித நீராடினர். பின், கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.
லாட்ஜில் எகிறிய வாடகை: நேற்று முன்தினம் இரவு முதல் ராமேஸ்வரத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. மேலும், விடுமுறை நாளான நேற்று 50 ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் குவிந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சில தனியார் லாட்ஜ் உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் இணைந்து நிர்ணயித்த வாடகை ரூ. 400 முதல் 1200 விட, ரூ. 800 முதல் 2000 என 100 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். பெரும்பாலான லாட்ஜ்களில் விலை பட்டியல் இல்லை என பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.