பதிவு செய்த நாள்
05
ஜூலை
2011
12:07
சூளைமேடு : சூளைமேடு நவசக்தி விநாயகர் கோவிலுக்குள், புதிதாக வீற்றிருக்கும் சிவபெருமான் பார்வதிக்கான கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகர் அப்துல்லா தெருவில், 1987ம் ஆண்டு விநாயகருக்கு கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 2001ம் ஆண்டு, அடுத்த கும்பாபிஷேகமும் நடந்து முடிந்தது. இந்நிலையில், கோவிலில் விநாயகருடன், பரிகார தெய்வங்களாக பாலமுருகன், அய்யப்பன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், துர்க்கை ஆகியவை உள்ள நிலையில், சிவபெருமான் பார்வதி இல்லாமல் இருந்தது. மாதந்தோறும் பிரதோசத்தின் போது பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக, சிவபெருமான் பார்வதிக்கு, கோவில் வளாகத்தினுள் உள்ளேயே சிறிய கோவில் கட்டப்பட்டது. இதற்காக கடந்த 2ம் தேதி யாக சாலை துவங்கப்பட்டு, நேற்று காலை 9 மணிக்கு மேல் சிம்மம் புறப்பாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழுங்க, பக்தர்களின் பரவச கோஷத்திற்கு இடையே, விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.