சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டியில் நடந்த ஆண்டு உற்சவ விழாவில் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. கம்பிளியம்பட்டி மற்றும் காட்டுப்பட்டியில் அமைந்துள்ள முத்தாலம்மன், பகவதியம்மன், சக்தி காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்களின் திருவிழா கடந்த மே., 5 ல் கங்கணம் கட்டுதலுடன் துவங்கியது. மே., 19 அன்று இரவு முளைப்பாரியுடன் முத்தாலம்மன் தவிர பிற சுவாமிகளுக்கு கரகம் ஜோடிக்க புறப்பாடு நடந்தது. மறுநாள் காலை வாண வேடிக்கையுடன் சுவாமி கரகங்கள் கோயிலுக்கு வந்தன. தொடர்ந்து மாவிளக்கு, தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து அபிஷேகம், பழம் வைத்து கிடா வெட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு கழுமரம் ஏறினர். இன்று மாலை அம்மன் பூஞ்சோலை செல்வதுடன் விழா நிறைவடைகிறது.