பதிவு செய்த நாள்
25
மே
2015
12:05
வடமதுரை : வடமதுரையில் தேரோடும் வீதிகளில் குறுக்கே செல்லும் மின் வயர்களை நிரந்தரமாக மாற்றியமைக்க வேண்டும். வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் சில நூறு ஆண்டுகளை கடந்த பழமை வாய்ந்ததாகும். இங்கு ஆடி மாதத்தில் தேரோட்டம் நான்கு ரத வீதிகள் வழியே நடக்கிறது. தேரோட்டம் துவங்கும் முன்னர், மின்வாரிய ஊழியர்கள் தேர் வீதிகளின் வழியே குறுக்கே செல்லும் மின் வயர்களை கழற்றிவிடுவர். தேர் கடந்த பின்னர், ஒவ்வொரு மின் வயராக மீண்டும் பொருத்துவர். இதனால் தேரோட்டத்தின் போது நான்கு ரத வீதிகளும் இருளில் முழ்கி இருக்கும். தேருடன் இணைக்கப்பட்ட ஜெனரேட்டர் மூலம் எரியும் தேர் அலங்கார விளக்குகளில் இருந்து கிடைக்கும் வெளிச்சம் இருக்கும். கடந்த திருவிழா வரை பயன்பாட்டில் இருந்த தேர் சிறிய அளவிலானது என்பதால், குறைந்தளவு சிரமத்துடன் பக்தர்கள் தேரை இழுத்து சமாளித்தனர்.
புதிய தேர்: தற்போது தேர் பழுதாகிவிட்டதால், புதிய தேர் அமைக்கும் பணி அறநிலையத்துறை அனுமதியுடன் நடந்து வருகிறது. 27.60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 11 டன் எடையுடன் 15 அடி அகலம், 35 அடி உயராக கொண்டதாக புதிய தேர் கட்டுமான பணி நடந்து வருகிறது. புதிய தேர் அதிக எடை, அகலம், உயரம் கொண்டதாக இருப்பதால் இருளில் தேரோட்டம் நடத்துவது மிகவும் சிரமமான காரியம். எனவே, தேர் வீதிகளில் குறுக்கே செல்லும் மின் வயர்களை நிரந்தரமாக அகற்றிவிட்டு, மாற்று இடங்களில் இருக்கும் மின்கம்பங்களின் மூலமாகவோ, புதிய கம்பங்கள் நிறுவியோ, கேபிள் பதித்தோ தேரோட்டத்திற்கு இடையூறு இல்லாமல் மாற்றி அமைக்க வேண்டும். தேரோட்டத்தின் போது ரத வீதிகளில் முழு அளவில் மின்சப்ளை இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை மனு தரப்பட்டுள்ளது.